'ஏலியன்' யார் * கால்பந்து 'ரவுண்ட்-அப்'
உலக கோப்பை கால்பந்து அரங்கில் ஆறாவது முறையாக களமிறங்குகிறார் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி. இவர் குறித்து இந்திய கால்பந்து முன்னாள் வீரர் மெஹ்தாப் ஹுசைன் (33 போட்டி) கூறுகையில்,''பொதுவாக கடைசி உலக கோப்பை தொடர் என்றால் ஒவ்வொரு வீரரும் முடிந்தவரை வெற்றிக்கு போராடுவர். மெஸ்ஸிக்கு இது கடைசி தொடர். அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இன்னும் கோல்கள் அடிக்கிறார், சக வீரர்களுக்கு உதவுகிறார். அனைத்து காலத்திலும் சிறந்த வீரராக திகழ்கிறார். உண்மையில் கால்பந்தின் 'ஏலியன்' (வேற்று கிரகவாசி) என்றால் அது மெஸ்ஸி தான்,''என்றார்.
பத்திரிகையாளரான லாரிசா
உலக கோப்பை கால்பந்தில் மீண்டும் களமிறங்குகிறது பராகுவே (9வது முறை). கடைசியாக 2010ல் பங்கேற்ற போது, பராகுவே மாடல் லாரிசா,' தங்கள் அணி கோப்பை வென்றால் ஆடையில்லாமல் ஓடுவேன்' என அறிவித்து பரபரப்பு கிளப்பினார். இம்முறை பத்திரிகையாளராக களமிறங்கும் இவர் கூறுகையில்,'' 2010ல் ரசிகையாக உலகளவில் பிரபலம் ஆகினேன். விளம்பர வாய்ப்புகள் வந்தன. பல்வேறு மீடியாவில் பணியாற்றினேன். தற்போது 16 ஆண்டுக்குப் பின் மீண்டும் வந்துள்ளேன்,'' என்றார்.
ஈரான் ரசிகர்களிடம் பிளவா
ஈரானில் 1979ல் ஏற்பட்ட புரட்சி, அரசியல் குழப்பம், ஒடுக்குமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர், அமெரிக்காவில் குடியேறினர். லாஸ் ஏஞ்சல்சில் வசிக்கும் இவர்களை 'டெஹ்ரான்ஜல்ஸ்' என அழைக்கின்றனர்.
தற்போது உலக கோப்பை தொடருக்காக அமெரிக்கா வந்துள்ள ஈரான் 'டீம் மெல்லி' (பாரசீக மொழியில் தேசிய அணி) பங்கேற்கும் போட்டிகளை காண்பதில் பிளவு பட்டுள்ளனர்.
போராடிய மக்களிடம் ஈரான் அரசு காட்டிய ஒடுக்குமுறை கோபத்தை தந்தாலும், தற்போது அமெரிக்கா, தங்கள் தேசத்தின் மீது நடத்தும் தாக்குதல் எல்லை மீறிச் சென்று விட்டதோ என நினைக்கின்றனர்.
கால்பந்து போட்டி ரசிகரான ஷாபி கூறுகையில்,''உலகின் என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, எங்கள் 'டீம் நெல்லியை' அருகில் பார்க்க இருப்பதால் உற்சாகத்தில் உள்ளோம்,'' என்றார்
மற்றொரு ரசிகர் ரெஸாயி கூறுகையில்,'' அரசியல் சூழல் காரணமாக ஈரான் போட்டியை புறக்கணிக்கிறேன்,'' என்றார்.