நெஸ்டோரி... குட்டி 'ஸ்டோரி'
ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நெஸ்டோரி இரங்குண்டா, 20. புருண்டியில் உள்நாட்டு போர் வெடிக்க, இவரது பெற்றோர் தான்சானியாவில் இருந்த கிகோமா அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்தனர். அங்கு தான் நெஸ்டோரி 2006ல் பிறந்தார். பின் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்கு குடிபெயர்ந்தனர். இங்கு கால்பந்து ஆட்டத்தில் நெஸ்டோரி அசத்த, அடிலெய்டு ஜூனியர் அணியில் இடம் பெற்றார். முன்கள வீரரான இவரது துணிச்சலான ஆட்டம் தேர்வாளர்களை கவர்ந்தது. உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். நேற்று துருக்கிக்கு எதிராக 27வது நிமிடத்தில் கோல் அடித்து, வெற்றி நாயகனாக ஜொலித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டிம் காஹில் போல, 'கார்னர் பிளாக்' மீது சில 'பஞ்ச்' கொடுத்தார். இவர் கூறுகையில்,''டிம் தான் எனது 'ரோல்-மாடல்'. கோல் அடித்தால், அவரை போல கொண்டாட நினைத்தேன். அதனால் தான் குத்துச்சண்டை வீரர் மாதிரி சில 'பஞ்ச்' கொடுத்து மகிழ்ந்தேன்,''என்றார்.
பராகுவே 'மாடல்' பரவசம்
உலக கோப்பை போட்டியை காண வரும் பராகுவே நாட்டின் அழகு பெண்கள், ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடிக்கின்றனர். 2010ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த தொடரில் லாரிசா ரிக்கில்ம் தனது கவர்ச்சியால் கிறங்கடித்தார். இம்முறை பராகுவேயின் 'மாடல்' அழகி மரிசோல் ஒல்மெடோ அசத்துகிறார். லாஸ்ஏஞ்ல்சின் சோபி மைதானத்தில் நடந்த போட்டியை காண வந்திருந்தார். இதில் பராகுவே அணி, அமெரிக்காவிடம் தோற்றது. இருப்பினும் அரங்கில் இருந்தவாறு பராகுவே வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்தார் மரிசோல். வரும் போட்டிகளிலும் இவரது ஆரவாரம் தொடரும். இவர் கூறுகையில்,''சர்வதேச அளவில் எனது பெயர் பிரபலமாகி இருக்கிறது. விரைவில் 'ஹாலிவுட்' படங்களில் நடிக்க காத்திருக்கிறேன்,'' என்றார்.
மூக்கோடு மூக்கு வச்சு..
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 54, காதல் வலையில் விழுந்துள்ளார். அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, 41, உடன் நெருங்கி பழகி வருகிறார். இவர், உலக கோப்பை துவக்க போட்டியில் கனடா-போஸ்னியா, ஹெர்சிகோவினா மோதிய போட்டியை காணவில்லை. சொந்த நாட்டை புறக்கணித்துவிட்டு காதலி கேட்டி பெர்ரிக்காக, அமெரிக்கா பறந்தார். அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடந்த துவக்க விழாவில் கேட்டி பெர்ரியின் ஆடல், பாடலை கண்டு ரசித்தார். இது பற்றி ஜஸ்டின் கூறுகையில்,''உலக கோப்பையை கனடா வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். காதலிக்கு ஆதரவு அளிக்கும் கடமையும் காதலனுக்கு உண்டு,''என்றார். இதை கேட்டு ஆத்திரமடைந்த கனடா நாட்டு ரசிகர்கள்,'இந்த வயதில் காதல் தேவையா.. நாட்டுப்பற்று இல்லாதவர்,' என ஜஸ்டினை வறுத்தெடுக்கின்றனர்.