மெய்சிலிர்க்க வைக்கும் மெஸ்ஸி...
ஆர்லிங்டன்: உலக கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி சாதனைகள் வியக்க வைக்கின்றன.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 39. கடந்த 2006 உலக கோப்பை தொடரில், செர்பியா அண்டு மான்டேனெக்ரோ அணிக்கு எதிராக 75 வது நிமிடத்தில் அறிமுகம் ஆனார். 88வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த இவர், சக வீரர் ஒரு கோல் அடிக்கவும் உதவினார்.
2010 தொடரில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அடுத்து 2014 பிரேசில் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, 'கோல்டன் பால்' விருது வென்றார். 2018ல் 'ரவுண்டு-18' போட்டியில் பிரான்சிடம் தோற்றது அர்ஜென்டினா. மெஸ்ஸி இனி அவ்வளவு தான் என விமர்சனம் எழுந்தன.
2022ல் எழுச்சி பெற்ற மெஸ்ஸி, தனிநபராக போராடினார். ஒரே தொடரில் 7 கோல் அடித்தார். அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். இதில், பிரான்சை சாய்த்து, அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்தார். மீண்டும் 'கோல்டன் பால்' தட்டிச் சென்றார். இம்முறை 39 வயதிலும் அசத்துகிறார். அல்ஜீரியாவுக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ஆஸ்திரியாவுடன் 2 கோல் அடித்த மெஸ்ஸி, உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் என சாதித்தார் (18 கோல்).
மீண்டும் வெல்லுமா
உலக கோப்பை தொடரில் இத்தாலி (1934, 1938), பிரேசில் (1958, 1962) அணிகள் அடுத்தடுத்து கோப்பை வென்றன. 1962க்குப் பின் எந்த அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை சாதித்து இல்லை. இம்முறை மெஸ்ஸி அசத்தினால், அர்ஜென்டினா தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன் ஆகலாம்.
18 கோல்
உலக கோப்பை அரங்கில் மெஸ்ஸி அடித்த 18 கோல்.
ஆண்டு எதிரணி கோல்
2006 செர்பியா 1
2014 போஸ்னியா 1
2014 ஈரான் 1
2014 நைஜீரியா 2
2018 நைஜீரியா 1
2022 சவுதி அரேபியா 1
2022 மெக்சிகோ 1
2022 ஆஸ்திரேலியா 1
2022 நெதர்லாந்து 1
2022 குரோஷியா 1
2022 பிரான்ஸ் 2
2026 அல்னீரியா 3
2026 ஆஸ்திரியா 2
முதலிடத்தில்...
உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெஸ்ஸி. இதுவரை 28 போட்டியில் 18 கோல் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் ஜெர்மனியின் குளோஸ் (24ல் 16), பிரான்சின் எம்பாப்வே (16ல் 16) உள்ளனர்.
'டாப்--5' யாரு
வீரர்/நாடு போட்டி கோல்
மெஸ்ஸி/அர்ஜென்டினா 28 18
குளோஸ்/ஜெர்மனி 24 16
எம்பாப்வே/பிரான்ஸ் 16 16
ரொனால்டோ/பிரேசில் 19 15
முல்லர்/மேற்கு ஜெர்மனி 13 14
பிறந்தநாள்
மெஸ்ஸி இன்று தனது 39 வயது பிறந்தநாள் கொண்டாடுகிறார். உலக கோப்பை கால்பந்தில் அதிக கோல் அடித்தது, அவருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது.
தொடர்ந்து 6 போட்டியில்...
உலக கோப்பை வரலாற்றில் கத்தார் (2022) தொடரில் 4, இம்முறை 2 என, தொடர்ந்து ஆறு போட்டியில் கோல் அடித்த மூன்றாவது வீரர் ஆனார் மெஸ்ஸி. முன்னதாக 1958ல் பிரான்சின் போன்டைன், 1970ல் பிரேசிலின் ஜெய்ரினோ, தொடர்ந்து ஆறு போட்டியில் அசத்தினர்.
'பெனால்டி' அலர்ஜி
உலக கோப்பை தொடரில் மெஸ்ஸி, 7 முறை 'பெனால்டி' வாய்ப்பை பயன்படுத்தினார். இதில் 4ல் தான் கோல் அடித்துள்ளார்.
இதுவரை...
அர்ஜென்டினா அணிக்காக இதுவரை 201 போட்டியில் பங்கேற்ற மெஸ்ஸி, 122 கோல் அடித்துள்ளார்.
40 ஆண்டுக்கு முன்
கடந்த 1986, ஜூன் 22ல் நடந்த உலக கோப்பை காலிறுதியில், மாரடோனா, 2 கோல் அடிக்க, அர்ஜென்டினா 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது.
சரியாக 40 ஆண்டுக்குப் பின் 2026, ஜூன் 22ல், மெஸ்ஸி கோல் அடித்து, அணியை 'நாக் அவுட்' சுற்றுக்கு கொண்டு சென்றார்.
யார் அதிகம்
உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்களில் முதல்வனாக உள்ளார் மெஸ்ஸி (18). பாடிஸ்டுடா (10), மாரடோனா (8), கிலர்மோ (8), கெம்பெஸ் (6), ஹிகுவேன் (5) அடுத்தடுத்து உள்ளனர்.
21 முறை
அதிக போட்டிகளுக்கு கேப்டனாக களமிறங்கியவர் மெஸ்ஸி (21). அடுத்த இரு இடத்தில் மெக்சிகோவின் மார்குயஸ் (17), மாரடோனா (16) அடுத்து உள்ளனர்.
20 ஆண்டு, 6 நாள்
கடந்த 2006ல் மெஸ்ஸி, தனது முதல் உலக கோப்பை கோல் அடித்தார். தற்போது 20 ஆண்டு, 6 வது நாளில் ஆஸ்திரியாவுக்கு எதிராக கோல் அடித்துள்ளார். இது மிக நீண்ட இடைவெளியில் அடிக்கப்பட்ட கோல் ஆனது. அடுத்து போர்ச்சுகலின் ரொனால்டோ (16 ஆண்டுல 160 நாள்) உள்ளார்.
மகிழ்ச்சி
மெஸ்ஸி கூறுகையில்,'' உலக கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளும் சம பலத்துடன் விறுவிறுப்பாக உள்ளன. சாதனை ஒருபக்கம் இருந்தாலும், 'பெனால்டி' வாய்ப்பை தவறவிட்ட போது கோபம் ஏற்பட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிராக வென்றது மகிழ்ச்சி. இது கடினமான வெற்றி. வரும் போட்டிகளை நிம்மதியாக எதிர்கொள்ள இந்த வெற்றி உதவும்,'' என்றார்.
எதிர்பார்த்த குளோஸ்
ஜெர்மனி வீரர் குளோஸ் கூறுகையில்,'' சாதனைகள் முறியடிக்கப்படும். இதை மெஸ்ஸி செய்தது மகிழ்ச்சி. நான் அவரது ரசிகன்,'' என்றார்.
---------------------------------------