இது வெறும் ஆரம்பம் தான்; மும்பை உணவகங்களுக்கு துக்காராம் முண்டே எச்சரிக்கை
மும்பை: மாநிலம் முழுவதும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ள மஹாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் துகாராம் முண்டே, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் உணவகங்கள் உணவுப் பாதுகாப்பு துறை விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மஹாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையராக இருப்பவர் துக்காராம் முண்டே. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான இவர், உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். லைசென்ஸ் இல்லாத உணவகங்கள், உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன.
தற்போது கல்வி நிறுவனங்களை ஒட்டிய பகுதிகளில் செயல்படும் உணவகங்கள் மீது அவரது கவனம் திரும்பியுள்ளது. இது தொடர்பாக, கல்வித்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தகுந்த உத்தரவுகளை முண்டே பிறப்பித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே கூறியிருப்பதாவது:
இந்த நடவடிக்கைகள் எல்லாம் வெறும் ஆரம்பம் தான். உணவகங்களில் சுத்தம், சுகாதார பராமரிப்பு மிகவும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். தவறினால் நடவடிக்கை இருக்கும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் உணவகங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக, கல்வித்துறை, உள்ளாட்சித்துறையினருடன் பேசியுள்ளேன். விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், உணவகங்கள் மூடப்படும். குற்றவியல் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும்.
மஹாராஷ்டிரா முழுவதும் சாலையோர உணவகங்கள் மற்றும் சீன உணவு, வடா பாவ் விற்கும் கடைகள் உள்ளிட்ட பிற உணவு நிறுவனங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சுத்தம் அதிகரித்துள்ளது. ஆனாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுகாதாரமற்ற உணவு நிறுவனங்களைப் பற்றிப் புகார் அளிக்குமாறும், அத்தகைய இடங்களில் உண்பதைத் தவிர்க்குமாறும் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துக்காராம் முண்டே கூறினார்.
கடந்த வாரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவுப் பொருள் பாதுகாப்புத்துறையினர் நடத்திய ஆய்வில் தரமற்ற 698 கிலோ பால் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
மேலும்
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
மகளை காணவில்லை தாய் போலீசில் புகார்
-
பீஹாரில் சத்துணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 40 பேர் மயக்கம்: உப்புக்கு பதில் சோப்பு பவுடர் கலந்தது விசாரணையில் அம்பலம்
-
வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
செய்தி சாரல்