கேரட் வரத்து குறைவு: விலை உயர்வால் பாதிப்பு

கோத்தகிரி: ஊட்டி கேரட் உற்பத்தி குறைந்து வருவதால், விலை உயர்வு ஏற்பட்டு உள்ளூர் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டை கோஸ், மற்றும் உருளை கிழங்கு உட்பட, இங்கிலீஷ் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோத்தகிரி பகுதியை பொருத்தமட்டில், தேயிலை பிரதான விவசாயமாக இருந்தாலும், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலை காய்கறி அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு போகத்தில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது.

மழை பொய்த்து, வறட்சியான காலநிலை நிலவினாலும், ஓடைகளில் தடுப்புகள் அமைத்து, இரவு நேரத்தில் சிறுக, சிறுக சேகரமாகும் தண்ணீரை தேக்கி, காய்கறி தோட்டங்களுக்கு விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.

தற்போது, உற்பத்தி குறைந்துள்ளதால், அறுவடை செய்யப்படும், ஒரு கிலோ கேரட்டிற்கு, 80 முதல், 90 ரூபாய் வரை மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்ளூர் மார்க்கெட்களில், 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்வதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், கேரட் விவசாயம் செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement