ரயில்வே கேட் மேம்பாலம் இருளில் மூழ்கும் அவலம்
விழுப்புரம்: விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலம், இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது.
விழுப்புரம் நகரில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலம், ரூ.34 கோடி செலவில் அமைந்துள்ளது. விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், விழுப்புரம் நகரை உள்ளூர் புறவழிச்சாலையுடன் இணைக்கிறது.
கடந்த 2018 ம் ஆண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த பாலத்தின் இருபுறமும், மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
கடந்த சில தினங்களாக, பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் பாலம் இருளில் மூழ்கியுள்ளது.
அந்த வழியாக செல்லும் கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள், இரவு நேரங்களில், வெளிச்சம் தர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.