ஆசிரியரை கீழே தள்ளி தாலி செயின் பறிப்பு
வண்டலுார், ஆக. 23-–
வண்டலுாரில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டு, வீடு திரும்பிய அரசு பள்ளி ஆசிரியை கீழே தள்ளி, தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி, 49. இவர் ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
விடுமுறை தினமான நேற்று, ஊனமாஞ்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக காலையில் சென்றார்.
பின், பணி முடித்து மண்ணிவாக்கம் செல்வதற்காக, நேற்று மாலை வண்டலுார் ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில், நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென அவரை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க தாலி செயினை அறுத்துவிட்டு தப்பி சென்றார்.
செயினில் இருந்து தவறி விழுந்த இரண்டு சவரன் தாலி மட்டும் மீட்கப்பட்டது. ஒட்டேரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.