நிதி உதவி கோரி மத்திய அரசிடம் அமைச்சர் சிவக்கொழுந்து மனு

புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைகள் நலத்திற்காக, மத்திய அமைச்சரிடம், அமைச்சர் சிவக்கொழுந்து நிதி உதவி கோரி மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவக்கொழுந்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவியை டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, அவர், தனது துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது; மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3.19 கோடி, மத்திய அரசின் இரண்டாம் தவணை நிதியை விரைந்து விடுவித்திட வேண்டும். புதுச்சேரியில் தற்போது செயல்பட்டு வரும் 855 அங்கன்வாடி மையங்களுடன், கூடுதலாக 77 புதிய அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.

மேலும், தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களின் பழுதுபார்ப்பு, புனரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு சிறப்பு மத்திய நிதியுதவி வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரின் சாதகமான பரிசீலனையும், விரைவான நடவடிக்கையும், புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்து என அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

Advertisement