சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்: மாணவிகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ‘அட்வைஸ்’

கள்ளக்குறிச்சி: ‘சட்டத்தை தெரிந்து கொண்டு, மாணவிகளாகிய நீங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என முதன்மை மாவட்ட நீதிபதி பேசினர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ‘சுரக்ஷித் பச்பன் அபியான்’ எனும் பாதுகாப்பான குழந்தை பருவம் குறித்த விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி சையத் பர்கத்துல்லா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ராஜவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரவீனா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கீதா வரவேற்றார்.

முதன்மை மாவட்ட நீதிபதி பேசியதாவது:

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. பெண் குழந்தைகளான உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால், அதனை உடனடியாக உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த சமுதாயத்திற்கும், காவல்துறை, நீதித்துறையை சார்ந்தவர்களுக்கும் உங்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. பாலியல் குற்றங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது நம் அனைவரது கடமை.

மாணவிகளான நீங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். உங்களுக்கு சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். சட்டங்கள் அறிவோம். பாதுகாப்பை உறுதிசெய்திடுவோம் என்பது உங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். சட்டத்தை தெரிந்து கொண்டு, உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், 1098 என்ற இலவச போன் எண்ணுக்கு தெரிவியுங்கள். உங்களை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்

இவ்வாறு நீதிபதி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்வி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, சிங்கப்பெண் சிறப்பு படை சப் இன்ஸ்பெக்டர் கனகவல்லி ஆகியோர், போக்சோ சட்டம், பாலியல் குற்றங்களில் பெண் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளவது குறித்து பேசினர்.

Advertisement