மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடவில்லை: மத்திய அரசு

புதுடில்லி:

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள், 2016 ம் ஆண்டு மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. அதன் பிறகு புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வெளியிடப்பட்டன.பிறகு 2023ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் நோட்டை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றது. தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

ஆனால், சமீப நாட்களாக சமூக ஊடகத்தில், தஞ்சை பெரிய கோவில் கோபுரம் படத்துடன் 1000 ரூபாய் நோட்டின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. ரிசர்வ் வங்கி இந்த நோட்டை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டது. இதனை நம்பி பலரும் சமூக ஊடகத்தில் பரப்பினர்.

ஆனால் இதனை மறுத்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிட உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவுகிறது. இந்த தகவல் போலியானது. புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வமான முறையில் தகவலை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement