

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஊர்த்திருவிழாக்களில் விளையாடப்படும் விளையாட்டான உறியடித்தல். உறியடித்தல் விளையாட்டை சில இடங்களில் பானை உடைத்தல் என்றும் அழைக்கிறார்கள். தமிழர்கள் சிலவற்றிற்கு முரண்பட்ட பெயர் வைப்பதே வியப்பாக இருக்கும், கருப்பாக இருக்கும் ஆட்டிற்கு வெள்ளாடு என்றும் நல்ல பணக்காரனுக்கு பிச்சாண்டி என்றும் மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காதவனுக்கு பள்ளிக்கூடத்தான் என்றும் பெயர் வைத்திருப்பதைக் காணலாம்.
அதேபோல பானை உடைத்தல் என்பது ஒன்றின் அழிவைக்குறிப்பதாக உள்ளது என்பதால் அதை விளையாட்டுப் பானை என்றும் அழைக்கிறார்கள். எந்த பெயரில் அழைத்தாலும் உறியடித்தல் என்ற விளையாட்டு தமிழகம் முழுக்க ஒரேமாதிரியே விளையாடுகின்றார்கள். அதை எப்படி விளையாடுவது அது நமக்குச் சொல்லிக்கொடுக்கும் படிப்பினை என்னவென்று பார்ப்போம்.
உறியடித்தல் அல்லது பானை உடைத்தல் விளையாட்டு பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல், மஞ்சுவிரட்டு என்று விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகவோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஊர் திருவிழாவை முன்னிட்டோ நடத்தப்படும் தமிழர் விளையாட்டாகும். இளைஞர்களால் விளையாடப்படும் இந்த விளையாட்டு என்பது கண்ணைக் கட்டிக்கொண்டு பானையை உடைக்க வேண்டும். நாம் நினைப்பது போன்று கண்ணைக்கட்டிக்கொண்டு பானையை உடைப்பது அவ்வளவு எளிதல்ல.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று கிராமத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும் என்றாலும் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது அடுத்த தலைமுறைக்கு இதை சொல்லிக்கொடுப்பது நமது கடமை எனவே அதை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம். விழாக்காலங்களில் நடைபெறும் இந்த விளையாட்டை விளையாட இரு மூங்கில் கம்புகள் நடப்பட்டு அவற்றிற்கு இடையே கயிற்றைக் கட்டி, கயிற்றின் நடுவே மண்பானையை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். சற்றுத் துரம் தள்ளி எல்லைக்கோடுகள் போடப்பட்டிருக்கும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அனைவரும் அந்த எல்லைக் கோட்டில் வரிசையாக நிற்க வேண்டும். கலந்து கொள்பவர்களின் கண்ணையெல்லாம் ஒருவர் துணியால் கட்டி அவர்கள் கையில் ஒரு நீளமான கம்பை கொடுத்து, அவர்கள் திசையினைக் கண்டுபிடிக்க முடியாதவாறு நான்கைந்து சுற்றுகள் சுற்றி விடுவார்.இவ்வாறு சுற்றி விடுவதால் பானையிருக்கும் திசையை அவ்வளவு எளிதாக குறிப்பால் அறியமுடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பானை இருக்கும் திசை நோக்கிச் சென்று,கையிலுள்ளகம்பினால் யார் பானையினை உடைக்கிறார்களோ அவரே போட்டியில் வென்றவராவர். அவருக்கு பரிசுகள் வழங்கப்படும். பானையை உடைப்பது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் சுமார் 20 அடி உயரத்தில் பானையை உரி கயிற்றால் கட்டி தொங்க விட்டிருப்பர். மேலும் கண்ணைக்கட்டிக்கொண்டு இருப்பவர் கம்பில் பானையை அடிக்கும் போது தொங்கும் பானையை ஒருவர் கீழும் மேலுமாக ஏற்றி இறக்குவார், அதனால் அது அடிப்பவர்க்கு மேலும் சிக்கலைத் தரும்.
அதாவது கண்ணைக் கட்டிக்கொண்டே ஏறி இறங்கும் பானையை குறிபார்த்து அடித்து உடைக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பானையை உடைப்பதொடு மட்டுமல்லாமல் எல்லைக் கோட்டை தாண்டாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு பானையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடைப்பதற்கு மூன்று வாயப்புகள் கொடுக்கப்படும். அதற்குள் உடைக்காதவர்கள் தோற்றவராவார். அவரது கண்கள் அவிழ்த்து விட்டு அடுத்தவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும். கண்ணைக்கட்டிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பானையின் ஏற்ற இறக்கத்தை கவனித்து பானையை உடைப்பவர் வெற்றி பெற்றவராவர். அவருக்கு பரிசுகளும் பணமுடிப்புகளும் கொடுக்கப்படும்.