

இது பெரும்பாலும் கிராமங்களில் பொங்கல் பண்டிகை அல்லது ஊர் திருவிழா போன்ற பொதுவான நிகழ்வின்போது ஆடவரால் விளையாடப்படும் விளையாட்டு. சல்லிக் கட்டு, சிலம்பம் போல வழுக்கு மரம் அல்லது கழு மரம் ஏறும் விளையாட்டும் வீர விளையாட்டாகும்.
நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட 50 அல்லது 60 அடி உயரமுள்ள பாக்கு மரத்தை நட்டு அதன் மேல் சோற்றுக் கற்றாழை. கேழ்வரகு, விருவிச்சாறு, விளக்கெண்ணெய் மற்றும் பலவிதமான எண்ணெய்களை தடவி பாக்கு மரம் மேலும் வழுவழுப்பான மரமாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி வழுக்கு மரம் ஏறுபவர்கள் மீதும், மரத்தின் மீதும், போட்டியின் போது மஞ்சள் தண்ணீர் ஊற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில் பண முடிப்பு மற்றும் பரிசுப் பொருள்கள் கட்டப்பட்டிருக்கும். எந்த குழு அல்லது தனி நபர் வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பையும் பரிசுப்பொருளையும் எடுக்கிறார்களோ அவர்களுக்கே அது சொந்தமாகும். அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பையும் பரிசுப்பொருளையும் கையில் எடுத்துவிட முடியாது. கண்ணுக்கு எட்டினது கையிக்கு எட்டுவதில்லை. நல்ல உடல் வலிமையுள்ள இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் ஒன்றுகூடி வேடிக்கைப் பார்ப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியாகும். வழுக்குமரத்தில் ஏறும்போது மரத்தின் மீதும் மரம் ஏறுபவர் மீதும் மஞ்சள் தண்ணீரை அடிப்பதால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக்கொண்டு கீழே வருவதைக் கண்டு கூடி நிற்பவர்கள் கைகொட்டி சிரித்து மகிழ்வர். கேளி, கிண்டல் செய்பவர்களையெல்லாம் மீறி, மரத்தின் உச்சியில் ஏறி அதில் உள்ள பரிசுப் பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பையும் பரிசுப்பொருளையும் எடுக்கும் இளைஞர் வெற்றி பெற்றவராவர். அவரே சிறந்த வீரராகவும் கருதப்படுவார்.