நிழலா... நிஜமா: ஷகிரா பாடியது உண்மையா

மெக்சிகோ சிட்டி: துவக்க விழாவில் பாடியது உண்மையான ஷகிரா தானா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.


உலக கோப்பை கால்பந்து துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. மெக்சிகோ சிட்டி மைதானத்தில் (அஸ்டெகா மைதானம்) திரண்டிருந்த 80,000 ரசிகர்கள் ஆரவாரமாக கண்டு ரசித்தனர். அரங்கில் ராட்சத உலக கோப்பை வந்தது, நடன கலைஞர்களின் ஆட்டம் என நிகழ்ச்சிகள் களை கட்டின.


பிரபல கொலம்பிய பாடகி ஷகிரா, 49, நைஜீரியாவின் பாடகர், பாடலாசிரியர் பர்னா பாய் இணைந்து 'டாய்..டாய்' என துவங்கும், அதிகாரப்பூர்வ பாடலை பாடினர். 'டாய்..டாய்' என்ற இத்தாலிய சொற்றொடருக்கு 'வாருங்கள் அல்லது முன்னேறிச் செல்லுங்கள்' என அர்த்தம். இது, ஊக்கம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2010ல் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்காக ஷகிரா துள்ளல் நடனத்துடன் பாடிய 'வாக்கா...வாக்கா' பாடல் 'ஹிட்' ஆனது. மீண்டும் 'டாய்...டாய்' பாடல் வாயிலாக, உலக ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இவர் உண்மையான ஷகிரா தானா என சிலர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இம்முறை மஞ்சள் நிற உடையில் பெரிய கண்ணாடி (சன்கிளாசஸ்) அணிந்திருந்தார். தலைமுடியின் நிறமும் வித்தியாசமாக இருந்தது. பார்ப்பதற்கு ஷகிரா போல இல்லை என சில ரசிகர்கள் கூறினர் 'பெரிய கண்ணாடி மூலம் கண்களை மறைத்துவிட்டார். ஷகிரா போல வேறு ஒருவரை போலியாக களமிறக்கியுள்ளனர். இடுப்பை அசைத்து நளினமாக நடனமாடுவார். இம்முறை இவரது ஆட்டம் மோசமாக இருந்தது,'என குறிப்பிட்டுள்ளனர்.

இதை மறுத்த வேறு சிலர்,''ஒரு ஷகிரா மட்டுமே இருக்க முடியும். அவரை போல ஒருவர் மட்டுமே நடனமாட முடியும். வீண் குழப்பம் வேண்டாம். போலியாக இருக்க வாய்ப்பு இல்லை. நீண்ட காலத்திற்கு பின் இவரை உலக கோப்பை துவக்க விழாவில் பார்க்கின்றனர். வயதாகும் போது தோற்றம் மாறும். அவரது நெற்றியில் உள்ள தழும்பு அப்படியே இருக்கிறது. துவக்க விழாவில் அசத்தியது உண்மையான ஷகிரா தான் என்பதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட துல்லியமான படங்களும் உறுதி செய்கின்றன,' என தெரிவித்தனர்.


7200 அடி உயரம்
துவக்க விழா நடந்த அஸ்டெகா மைதானம், கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் உள்ளது. 1970, 1986 உலக கோப்பை தொடரின் பைனல் இங்கு நடந்தன. ரூ. 2,865 கோடி செலவில் மைதானம் சீரமைக்கப்பட்டுள்ளது. உலகின் 8வது பெரிய மைதானமான இங்கு 87,523 பேர் அமர்ந்து ரசிக்கலாம்.