தந்தையின் தாய்நாட்டுக்கு மரியாதை: சுவீடன் வீரர் நெகிழ்ச்சி
மெக்சிகோவின் மான்டேரி நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுவீடன், துனிசியா அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சுவீடன் வீரர் யாசின் அயாரி 22, இரண்டு கோல் (7, 90+6வது நிமிடம்) அடித்தார். இவர், தனது முதல் கோல் அடித்த போது, தனது தந்தை அஸூஸ் அயாரியின் பிறந்த நாடான துனிசியாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆரவாரம் செய்யாமல் இரு கைகளை மட்டும் லேசாக உயர்த்தினார். பின், மைதானத்தில் மண்டியிட்டு இரு கைகளை கூப்பி வணங்கினார். பின், இரண்டாவது கோல் அடித்த போது அதனை உற்சாகமாக கொண்டாடினார் யாசின்.
இளம் வயதில் 'யூத்' பிரிவு போட்டிகளில் சுவீடன் அணிக்காக விளையாடிய யாசின் அயாரிக்கு, கத்தாரில் 2022ல் நடந்த உலக கோப்பையில் துனிசியா சார்பில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அயாரி மறுத்துவிட்டார்.
அஸூஸ் அயாரி கூறுகையில், ''எனது மகன் சுவீடனுக்காக விளையாடவே விரும்பினேன். ஏனெனில், தன்னை கவனித்துக் கொண்ட சுவீடனுக்கு ஏதேனும் திருப்பி செய்வதாக யாசின் உணர வேண்டும்,'' என்றார்.
தென் அமெரிக்கா ஏமாற்றம்
உலக கோப்பை கால்பந்தில் இம்முறை தென் அமெரிக்கா சார்பில் 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஈகுவடார், பராகுவே, உருகுவே என, 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் மூன்று அணிகள் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெறவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக பராகுவே அணி 1-4 என தோல்வியடைந்தது. ஐந்து முறை கோப்பை வென்ற பிரேசில் அணி, மொராக்கோ அணிக்கு எதிராக 1-1 என 'டிரா' செய்தது. ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிராக ஈகுவடார் அணி 0-1 என தோற்றது.
ஈகுவடார் பயிற்சியாளர் செபாஸ்டியன் பெக்காசேஸ் கூறுகையில், ''இது மிகவும் வேதனையான சூழல்'' என்றார்.
பராகுவே பயிற்சியாளர் கஸ்டாவோ அல்பாரோ கூறுகையில், ''இது மிகவும் வேதனையான பாடம்'' என்றார்.
மற்ற தென் அமெரிக்க அணிகளான உருகுவே (எதிர்: சவுதி அரேபியா), அர்ஜென்டினா (எதிர்: அல்ஜீரியா), கொலம்பியா (எதிர்: உஸ்பெகிஸ்தான்) அணிகள் தங்களது முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.