ஜோரா நோரா: உலக கால்பந்து துவக்க விழாவில்

உலக கோப்பை தொடர் 3 நாடுகளில் நடப்பதால், 3 துவக்க விழாக்கள் நடந்தன. மெக்சிகோவின் அஸ்டெக் மைதானத்தில் நடந்த முதல் விழாவில் கொலம்பிய பாடகி ஷகிரா அசத்தினார்.

அடுத்து கனடாவின் டொரன்டோ மைதானத்தில் அரங்கேறிய நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை நோரா படேஹி 'சிர்ர்... சிர்ர்' என்ற அதிகாரப்பூர்வ பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். கனடாவின் தேசிய கொடியின் சிவப்பு, வெள்ளை, தங்க நிறத்தை குறிக்கும் வகையில் மைதானம் பல வண்ணங்களில் ஜொலித்தது. சிவப்பு நிற உடையில் தோன்றிய நோரா, தங்க நிற ராட்சத கால்பந்துக்கு முன் ஆடிப் பாடி மகிழ்வித்தார்.


கனடாவில் பிறந்த நோரா, 34, பாடகி, நடிகை, நடனக் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். மனதளவில் தன்னை இந்தியராக கருதும் இவர், பாலிவுட் படங்கள், 'டிவி' நிகழ்ச்சிகளில் முத்திரை பதித்துள்ளார்.


நோரா கூறுகையில்,''உலக கோப்பை துவக்க விழாவில் பாடியது பெரிய விஷயம். எனது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. 2022ல் கத்தாரில் நடந்த உலக கோப்பை நிறைவு விழாவில் 'பிபா' அதிகாரப்பூர்வ பாடலை பாடினேன். உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவில் இரு முறை பாட வாய்ப்பு கிடைத்ததை கவுரவமாக கருதுகிறேன்,''என்றார்.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சோபி மைதானத்தில் நடந்த 3வது துவக்க விழாவில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி, 41, நார்வேயின் ஜூனியர் பாடகர் டியுஸ் லுாகா உள்ளிட்ட நடனக் கலைஞர்கள் அசத்தினர். 10 வயதான லுாகாவின் இனிமையான குரல் அனைவரையும் கவர்ந்தது. கடைசி கட்டத்தில் லுாகாவை துாக்கி பெர்ரி கொஞ்சிய தருணம், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.