கோல் அடிக்கிற எண்ணம்... முடியுமா... நடக்குமா... இன்னும்...
அமெரிக்காவின் அட்லான்டாவில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-2' அணியான ஸ்பெயின், அறிமுக கேப் வெர்டே அணியை (67வது இடம்) எதிர்கொண்டது. நடப்பு 'யூரோ' சாம்பியன், முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயின் எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெத்ரி, டோரஸ், லமைன் யமால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு 'தண்ணி' காட்டினார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்யா. 'பெருஞ்சுவர்' போல செயல்பட்ட இவர், ஸ்பெயினின் 7 கோல் வாய்ப்புகளை தடுத்தார். கோல் 'போஸ்ட்' நோக்கி ஸ்பெயின் வீரர்கள் அடித்த 27 'ஷாட்' கள் வீணாகின. முடிவில் போட்டி 'டிரா' (0-0) ஆக, கேப் வெர்டே ஒரு புள்ளி பெற்றது. இது வெற்றிக்கு சமம், என அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
77 லட்சமாக உயர்வு
அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு ஆப்ரிக்க கரையில் அமைந்துள்ள சிறிய தீவு தான் கேப் வெர்டே. மக்கள் தொகை 5 லட்சம். இவர்கள் போர்ச்சுக்கீசிய மொழி பேசுகின்றனர். இங்கு இருந்து புறப்பட்ட 'புயல்' வோசின்யா, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒரே நாளில் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார். சமூகவலைதளமான 'இன்ஸ்டா'வில் இவரை 'பாலோ' செய்பவர்களின் எண்ணிக்கை 50,000ல் இருந்து தடாலடியாக 77 லட்சமாக உயர்ந்துள்ளது. போர்ச்சுகலின் 2வது டிவிஷன், 'சாவஸ்' கிளப் அணிக்காக விளையாடி வரும் வோசின்யா, ஓய்வு பெறும் முடிவில் இருந்தார். பின் மனதை மாற்றினார். 40 வயது 12 நாளில் 'சீனியர்' கோல்கீப்பராக உலக கோப்பை தொடரில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார்.
இவர் கூறுகையில்,''இந்த தருணத்திற்காக தான், வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன். எனது கனவு நனவாகியுள்ளது,''என்றார்.
பெயருக்குள்ளே காந்தம் உண்டு...
வோசின்யாவின் இயற்பெயர் ஜோசிமர் ஜோஸ் இவோரா டியாஸ். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். தாயார் பல பணிகளில் 'பிசி'யாக இருக்க, தாத்தா, பாட்டியிடம் தான் வளர்ந்தார்.
வோசின்யா கூறுகையில்,''எனது பெயர் பின்னணி சுவாரஸ்யமானது. 1986, உலக கோப்பையில் அசத்திய அர்ஜென்டினாவின் ஜார்ஜ் வால்டோனா பெயரை, எனக்கு வைக்க தந்தை விரும்பினார். ஆனால், வெளிநாட்டு பெயரை கேப் வெர்டே அதிகாரிகள் நிராகரித்தனர். பின் போர்ச்சுகீசிய மொழி பேசும் பிரேசில் நட்சத்திர வீரர் ஜோசிமர் பெயரை தேர்வு செய்தார். சிறுவனாக இருக்கும் போது தெருவில் கால்பந்து விளையாடுவேன். அப்போது 'சீனியர்' வீரர்கள் என்னை அடித்துவிட்டு, 'பாட்டியிடம் போய் புகார் சொல்லப் போகிறான்' இந்த 'வோசின்யா' என கேலி செய்வர். போர்ச்சுக்கீசிய மொழியில் வோசின்யா என்றால் பாட்டி என்று அர்த்தம். இதுவே எனது செல்லப்பெயராக மாறியது. ஒரு முறை கால்பந்து போட்டிக்காக அங்கோலா சென்றேன். அங்கு ஏற்கனவே ஜோசிமர் என்ற பெயரில் ஒரு கோல்கீப்பர் இருந்தார். என்னை 'ஜோசிமர்-2' என அழைக்க விரும்பிவில்லை. எனது செல்லப்பெயரான வோசின்யாவை தேர்வு செய்தேன்,''என்றார்.
கண்ணீர் தருணம்
''நாட்டுக்காக உலக கோப்பை போட்டியில் விளையாடியது பெருமையாக இருக்கிறது. என்னை வளர்த்தது தாத்தா, பாட்டி தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். உலக கோப்பை போட்டியை காண இவர்கள் இல்லாததால், போட்டி முடிந்ததும் கண்ணீர் சிந்தினேன். உயிரோடு இருந்திருந்தால், பேரனை நினைத்து பெருமைப்பட்டிருப்பர். 'விசா'வுக்கு தேவையான பணம் இல்லாததால், எனது தாயாரும் போட்டியை காண அமெரிக்கா வர இயலவில்லை,''என்றார்.
-வோசின்யா
கோல்கீப்பர், கேப் வெர்டே