அன்டிம் பங்கலுக்கு 3 ஆண்டு தடையா... * ஒலிம்பிக் கிராமத்தில் சர்ச்சை கிளப்பினார்

பாரிஸ்: ஒலிம்பிக் கிராமத்திற்குள் தனது சகோதரியை அனுப்பி தவறு செய்த மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கலுக்கு மூன்று ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் களமிறங்கினார் இந்தியாவின் அன்டிம் பங்கல் 19. முதல் சுற்றில் தோற்று வெளியேறினார். போட்டி முடிந்த பின் ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்லாமல், ஓட்டலுக்கு திரும்பியுள்ளார் அன்டிம். இவருடன் பயிற்சியாளர் விகாஷ், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் பகத் சிங் இருந்தனர்.
அப்போது ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள தனது உடைமைகளை எடுத்து வருமாறு, தனது சகோதரி நிஷாவிடம் தெரிவித்துள்ளார். தனது அடையாள அட்டையை கொடுத்துள்ளார்.
பொருட்களை எடுத்து விட்டு திரும்பும் போது, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து விட்டனர். அன்டிம் அடையாள அட்டையுடன் வந்த நிஷாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின் அன்டிமை அழைத்து போலீசார் விசாரித்தனர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
தவிர, அன்டிம் பயிற்சியாளர்கள் விகாஷ், பகத் அங்குள்ள 'டாக்சியில்' பயணித்தனர். குடி போதையில் இருந்த இருவரும், 'டாக்சி' கட்டணத்தை தர மறுத்து தகராறு செய்ய, போலீசை அழைத்துள்ளார் டிரைவர்.
நடந்த சம்பவங்கள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் (ஐ.ஒ.ஏ.,) முறைப்படி புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.ஒ.ஏ., வெளியிட்ட அறிக்கையில்,'அன்டிம் அவரது குழுவினர், ஒழுக்க விதிகளை மீறியதாக பிரான்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இவர்களை இந்தியா திருப்பி அனுப்ப முடிவு செய்தோம்,' என தெரிவித்துள்ளது.
வருகிறது தடை
அன்டிம் செயலால் ஐ.ஒ.ஏ., அமைப்புக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. அன்டிம், அவரது பயிற்சியாளர், சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க மூன்று ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அன்டிம், இந்தியா திரும்பியதும் அறிவிக்கப்பட உள்ளது.

வேண்டுமென்று செய்யவில்லை
சம்பவம் குறித்து அன்டிம் கூறியது:
எனக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் எனது சகோதரியுடன் சேர்ந்து, ஓட்டலுக்கு செல்ல பயிற்சியாளரிடம் அனுமதி பெற்றேன். எனக்கு தேவையான உடைமைகள் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்தன.
எனது அடையாள அட்டையை எடுத்துச் சென்ற சகோதரி, ' இதை வைத்து ஒலிம்பிக் கிராமம் சென்று, உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பீர்களா,' என அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
அவர்கள், போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். ஒரு குழப்பமான சூழல் காரணமாக, அனைத்தும் தவறாக நடந்துள்ளன. மற்றபடி எந்த ஒரு செயலையும் வேண்டுமேன்றே செய்யவில்லை.
எனது பயிற்சியாளருக்கு நாங்கள் தான் 'டாக்சி' அனுப்பினோம். அவரிடம் போதிய பணம் இருந்தது. மொழி பிரச்னை காரணமாக இப்படி நடந்துள்ளது. ஏற்கனவே நான் மோசமான சூழலில் உள்ளேன். தயவு செய்து எனக்கு ஆதரவு கொடுங்கள், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement