நீரஜ் சோப்ரா தங்கம் நழுவியது எப்படி: காயத்தால் பறிபோன வாய்ப்பு


பாரிஸ்: ''காயம், போதிய உடற்தகுதி இல்லாததால் தங்கம் வெல்ல முடியவில்லை,'' என, நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிரனாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உட்பட 12 பேர் பங்கேற்றனர். நீரஜ் சோப்ரா 89.45 மீ., எறிந்து வெள்ளி வென்றார். தவிர இவர், 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை பறிகொடுத்தார். பாகிஸ்தானின் அர்ஷத் அதிகபட்சமாக 92.97 மீ., எறிந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். கிரனடாவின் பீட்டர்ஸ் (88.54 மீ.,) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், ''பைனலில் எனது செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. ஒரு முறை மட்டுமே சரியாக எறிந்தேன். மற்ற ஐந்து வாய்ப்புகளின் தவறு செய்தேன். பொதுவாக ஈட்டி எறிதலில் நன்றாக ஓடினால் தான், அதிக துாரம் எறிய முடியும். ஆனால் நான் நன்றாக ஓடவில்லை. காயம் காரணமாக கடந்த 2 அல்லது 3 ஆண்டுகள் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்தேன். பயிற்சியின் போதும் இடுப்பு பகுதி காயத்தால் அதிக முறை எறிய முடியவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் வலிமையாக மீண்டு வருவேன் என்று நம்புகிறேன். பைனலில் அர்ஷத் நதீம் சிறப்பாக விளையாடினார். தங்கம் வென்ற அவருக்கும், பாகிஸ்தானுக்கும் வாழ்த்துகள்,'' என்றார்.

விரைவில் 'ஆப்பரேஷன்'
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன் நீரஜ் சோப்ராவின் தொடையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் விளையாடிய நீரஜ் வெள்ளி வென்று ஆறுதல் அடைந்தார். இதுகுறித்து நீரஜ் கூறுகையில், ''போட்டியின் போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்தேன். இதனால் வேகமாக ஓடவில்லை. கடந்த ஆண்டு 'ஆப்பரேஷன்' செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டியிருந்ததால் சற்று யோசித்தேன். விளையாட்டில், காயத்தை லேசாக கருதிவிடக் கூடாது. உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே நீண்ட நாட்கள் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியும். எனது பயிற்சியாளர் குழுவினருடன் ஆலோசித்து 'ஆப்பரேஷன்' செய்வது குறித்து முடிவு செய்ய உள்ளேன்,'' என்றார்.

ஒரு எல்லை... இரண்டு தாயார்
நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் பதக்கம் வென்றதை அவர்களது தாயார் கொண்டாடி வருகின்றனர்.

நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது மகிழ்ச்சி. தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் எனக்கு மகன் தான். நீரஜ்-அர்ஷத்திற்கு இடையே எவ்வித வேறுபாடும் இல்லை. எங்களுக்கு இருவரும் ஒன்று தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அனைவரும் கடினமாக போராடுகின்றனர்,'' என்றார்.

அர்ஷத் நதீமின் தாயார் ரசியா பர்வீன் கூறுகையில், ''இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல சகோதரர்கள் போல இருக்கின்றனர். நீரஜ் சோப்ராவும் எனக்கு மகன் தான். இவர், நிறைய பதக்கம் வென்று சாதிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். போட்டியில் வெற்றி, தோல்வி சகஜம். எப்போதும் சகோதரர்களாக இருக்க வேண்டும்,'' என்றார்.



பிரதமர் வாழ்த்து


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''சர்வதேச அரங்கில் நீரஜ் சோப்ரா மீண்டும், மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் வெள்ளிப் பதக்கம் வென்றதை நாடே பெருமை கொள்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,'' என தெரிவித்திருந்தார்.

* முர்மு, ஜனாதிபதி: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த இவர், இளைஞர்களுக்கு ஊக்கமாக திகழ்கிறார். இவர் இந்தியாவுக்கு நிறைய பதக்கம் வென்று தர விரும்புகிறேன்,'' என்றார்.




ரூ. 10 கோடி பரிசு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர் அர்ஷத் நதீம் 27. இவரது தந்தை முகமது அஷ்ரப், கட்டட பணியாளாக வேலை செய்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அர்ஷத் நதீமுக்கு ஈட்டி வாங்க கூட பணமில்லை. கடந்த 9 ஆண்டுகளுகான ஒரே ஈட்டியை பயன்படுத்தி வந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் ஸ்பான்சரால் இவருக்கு புதிய ஈட்டி கிடைத்தது. பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ், ரூ. 10 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

நான்காவது இந்தியர்
சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற 4வது இந்தியரானார் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், 2020ல் தங்கம், 2024ல் வெள்ளி). ஏற்கனவே சுஷில் குமார் (மல்யுத்தம், 2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி), சிந்து (பாட்மின்டன், 2016ல் -வெள்ளி, 2020ல் வெண்கலம்), மனுபாகர் (துப்பாக்கிசுடுதல்-, 2024ல் 2 வெண்கலம்) இப்படி அசத்தினர்.

ஒலிம்பிக் சாதனை
நேற்று 92.97 மீ., துாரம் எறிந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஈட்டி எறிதலில் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதற்கு முன் பீஜிங் ஒலிம்பிக்கில் (2008), நார்வேயின் ஆன்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் 90.57 மீ., எறிந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

Advertisement