ஸ்ரீஜேஷ் புதிய அவதாரம்: வளர்ச்சியை நோக்கி இந்திய ஹாக்கி

பாரிஸ்: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட உள்ளார். இவரது வழிகாட்டுதலில் இந்திய ஹாக்கி உச்சம் தொடலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் அசத்திய இந்திய ஆண்கள் அணி மீண்டும் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது. இதற்கு கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் 36, முக்கிய காரணம். 'தடுப்புச்சுவராக' இருந்து எதிரணியின் கோல் வாய்ப்புகளை சிதறடித்தார். காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பிரிட்டனின் வாய்ப்புகளை தடுத்து, வெற்றி தேடித் தந்தார். ஸ்பெயினின் 9 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை தகர்த்து, இந்திய அணியின் வெண்கலப் பதக்க கனவை நனவாக்கினார். இந்த மகிழ்ச்சியுடன் தனது 18 ஆண்டு கால சர்வதேச ஹாக்கி பயணத்திற்கு ஓய்வு கொடுத்தார்.


இது குறித்து ஸ்ரீஜேஷ் கூறியது: அனைத்து விளையாட்டுகளிலும் வீரர்கள் ஓய்வு பெறுவது சகஜம். கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் கோலி வந்தார். கோலியின் இடத்தை இன்னொரு வீரர் பிடிப்பார். எனது ஓய்வால் இந்திய ஹாக்கியில் வெற்றிடம் ஏற்படாது. சிறந்த கோல்கீப்பர் கிடைப்பார். எனது வாழ்க்கை ஹாக்கியை சுற்றியே வந்தது. ஹாக்கியை தவிர வேறு எதுவும் தெரியாது. 2002ல் பயிற்சி முகாமில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை சக வீரர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன்.


ஒலிம்பிக் நெருக்கடி:காலை எழுந்தவுடன் பயிற்சி, உடலை வலுவாக்க 'ஜிம்' செல்வது, ஜாலியாக பேசுவது, போட்டிக்கான திட்டம் வகுப்பது, களத்தில் தவறு செய்பவர்களை கடிந்து கொள்வது, வெற்றியை கொண்டாடுவது, தோல்வி அடைந்தால் ஒன்றாக அழுவது என இந்திய அணியுடன் வாழ்ந்தேன். வீட்டிற்கு சென்ற பின் தான் ஹாக்கியை எந்த அளவுக்கு 'மிஸ்' செய்கிறேன் என்பதை உணர முடியும்.

ஒலிம்பிக் அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது ஏமாற்றம் தான். இருப்பினும் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்புவது மகிழ்ச்சியான விஷயம். இளம் வீரர்களின் திறமையை கண்டறிய, இந்திய ஹாக்கி லீக் தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட, இத்தொடர் உதவியது. ஒலிம்பிக் போட்டியில் நெருக்கடி அதிகம். இதை சமாளிப்பது குறித்து வளரும் வீரர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.


விரைவில் முடிவு: இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்கும்படி, ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே, பொதுச் செயலர் போலா நாத் சிங் வலியுறுத்தினர். போலா நாத்திடம் விரிவாக பேசியுள்ளேன். குடும்பத்தினருடன் விவாதித்து, பயிற்சியாளர் பதவியை ஏற்பது பற்றி முடிவு செய்வேன்.இவ்வாறு ஸ்ரீஜேஷ் கூறினார்.

உள்ள அழுகுறேன்... வெளியே சிரிக்கிறேன்

ஸ்ரீஜேஷ் கூறுகையில்,''பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் நமது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தேன். என்னை பார்த்ததும் சிரித்தார். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி புன்னகைக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். 100 கிராம் எடை கூடியதால், இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
வினேஷ் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார். மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் ஒரு போராளி என்பதால், எதையும் சமாளித்து மீண்டு வருவார். அவருக்கு சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். வென்றாலும் தோற்றாலும் வினேஷ் ஒரு நட்சத்திரம். உலகிற்கு தனது திறமையை நிரூபித்துவிட்டார். பதக்கம் வெல்லாவிட்டாலும், 140 கோடி இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளார்,''என்றார்.

Advertisement