வைபவ் அரைசதம் விளாசல்: 'யூத்' டெஸ்டில் அபாரம்

சென்னை: 'யூத்' டெஸ்டில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார்.

சென்னையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள், இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன.


முதல் டெஸ்டில் 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ரிலே கிங்செல் (53), ஐடன் ஓ'கார்னர் (61) நம்பிக்கை தந்தனர். கிறிஸ்டியன் ஹோவ் (48), ஆலிவர் பீக் (29) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் சமர்த் நாகராஜ், முகமது ஏனான் தலா 3, ஆதித்யா ரவாத் 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு விஹான் மல்கோத்ரா, வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய வைபவ் அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 103 ரன் எடுத்திருந்தது. விஹான் (21), வைபவ் (81) அவுட்டாகாமல் இருந்தனர்.




சமித் டிராவிட் விலகல்


ஆஸ்திரேலிய தொடருக்கான இளம் இந்திய அணியில் (19 வயது), முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மகன் சமித் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று சென்னையில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியிலும் இடம் பெறவில்லை. இவர், 2வது டெஸ்டிலும் (அக். 7-10, சென்னை) பங்கேற்பது சந்தேகம்.

Advertisement