கான்பூர் டெஸ்டில் இந்தியா சாதனை மழை * ஜெய்ஸ்வால், ராகுல் விளாசல்

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் ஜெய்ஸ்வால், ராகுல் 'மின்னல்' வேகத்தில் அரைசதம் விளாச, இந்திய அணி பல்வேறு சாதனை படைத்தது. ஆட்டம் 'டிரா' ஆகலாம் என்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 107/3 ரன் எடுத்திருந்தது.
மோமினுல் ஹக் (40), முஷ்பிகுர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ச்சியான மழை காரணமாக இரண்டு, மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக ரத்தானது. இதனால் போட்டி 'டிரா' ஆகலாம் என நம்பப்பட்டது.
பும்ரா 'மூன்று'
மாறாக நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் முதலில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் முஷ்பிகுர் ரகிமை (11) போல்டாக்கினார் பும்ரா. லிட்டன் தாசை (13) சிராஜ் அவுட்டாக்கினார். சாகிப் அல் ஹசன் (9), அஷ்வின் சுழலில் சிக்கினார். மீண்டும் மிரட்டிய பும்ரா, இம்முறை மெஹிதி ஹசன் (20), தய்ஜுல் (5) என இருவரையும் வெளியேற்றினார்.
மோமினுல் ஹக் சதம் விளாசினார். கடைசியில் காலேத் அகமது (1) ஜடேஜா சுழலில் சரிந்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. இந்தியாவின் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் 2, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஜெய்ஸ்வால் மிரட்டல்
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டர்கள் 'டி-20' போல ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி 'மின்னல்' வேக துவக்கம் கொடுத்தது. ஹசன் அகமது வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். மறுபக்கம் 2வது ஓவர் வீசினார் காலேத். இதில் தான் சந்தித்த முதல் இரு பந்தில் இரண்டு சிக்சர் அடித்தார் ரோகித். இந்தியா 3 ஓவரில் 51/0 ரன் எடுத்தது.
ரோகித் 23 ரன்னில் அவுட்டான போதும், ஜெய்ஸ்வால் 31வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 51 பந்தில் 72 ரன் எடுத்து அவுட்டானார். சுப்மன் கில் 39, ரிஷாப் பன்ட் 9 ரன் எடுத்தனர்.
ராகுல் விளாசல்
அடுத்து கோலி, ராகுல் இணைய, இந்திய அணியின் ரன்வேகம் மீண்டும் எகிறியது. ராகுல் அரைசதம் எட்டினார். 59 பந்தில் இந்த ஜோடி 87 ரன் எடுத்த போது, கோலி (47) அவுட்டானார். ஜடேஜா (8), அஷ்வின் (1), ஆகாஷ் (12) ஏமாற்றினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 285/9 ரன் எடுத்து, 52 ரன் முன்னிலையுடன் 'டிக்ளேர்' செய்தது.
அஷ்வின் நம்பிக்கை
பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வங்கதேச அணியின் ஜாகிர் (10), ஹசன் (4) என இருவரும் அஷ்வின் சுழலில் சிக்கினர். நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி, 26/2 ரன் எடுத்து 26 ரன் பின் தங்கி இருந்தது. ஷாத்மன் (7), மோமினுல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம். வங்கதேசத்தின் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால், இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

அதிவேக ரன் சாதனை

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன் எடுத்த அணி என புதிய சாதனை படைத்தது இந்தியா.
* நேற்று கான்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 3 ஓவரில் 51 ரன்னை (18 பந்து) எட்டியது. சமீபத்தில் இங்கிலாந்து 4.2 ஓவரில் 50 ரன் (வெ.இண்டீஸ்) எடுத்திருந்தது.
* 100 ரன்னை, இந்தியா 10.1 ஓவரில் எடுத்தது. முன்னதாக இந்திய அணி 12.2 ஓவரில் (வெ.இண்டீஸ், 2023) எடுத்திருந்தது.
* 150 ரன்னை 18.2 ஓவரில் எடுத்தது இந்தியா. இதற்கு முன் 21.1 ஓவரில் (வெ.இண்டீஸ், 2023) எடுத்தது இந்தியா.
* 200 ரன்னை 24.1 ஓவரில் இந்தியா எடுத்தது. முன்னதாக ஆஸ்திரேலியா 28.1 ஓவரில் (2017, பாக்.,) எடுத்தது.
* 250 ரன்னை இந்தியா 30.3 ஓவரில் எடுத்து சாதித்தது. முன்னதாக இங்கிலாந்து அணி 34 ஓவரில் (2022, பாக்.,) எடுத்தது.

ஜாகிரை முந்தினார்.
கான்பூர் டெஸ்டில் இதுவரை 4 விக்கெட் சாய்த்தார் அஷ்வின். இதையடுத்து வங்கதேசத்திற்கு எதிராக அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் ஜாகிர்கானை (31) முந்திய முதலிடம் பிடித்தார் அஷ்வின். இவர், 33 விக்கெட் சாய்த்துள்ளார்.

முதன் முறை
மூன்று வித கிரிக்கெட்டில் முதல் 20 பந்துக்குள் இந்திய அணி, அரைசதம் எடுத்தது நேற்று தான் முதன் முறையாக (18 பந்தில் 51 ரன்) நடந்தது. இதற்கு முன் 2023 ஆசிய 'டி-20'ல் இந்தியா 3.4 ஓவரில் அரைசதம் (எதிர்-வங்கம்) எட்டியது.

ரோகித் கலக்கல்

டெஸ்டில் சந்தித்த முதல் இரு பந்தில், இரண்டு சிக்சர் அடித்த நான்காவது வீரர் ஆனார் ரோகித். இதற்கு முன் வில்லியம்ஸ் (1948, வெ.இண்டீஸ்), சச்சின் (2013, இந்தியா), உமேஷ் யாதவ் (2019, இந்தியா) இதுபோல விளாசினர்.

31 பந்து
டெஸ்டில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர்களில், ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தை ஷர்துல் தாகூருடன் (2021, இங்கிலாந்து) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 31 பந்தில் இதை எட்டினர். முதல் இரு இடத்தில் ரிஷாப் (2022ல் 28 பந்து, இலங்கை), கபில்தேவ் (1982ல் 30, பாக்.,) முதல் இரு இடத்தில் உள்ளனர். சேவக் (2008ல் 32 பந்து, இங்கிலாந்து)

52 விக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ல் இதுவரை நடந்த போட்டியில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் வரிசையில் இந்தியாவின் அஷ்வின் (52 விக்.,) முதல்வன் ஆனார். ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (51 விக்.,) அடுத்து உள்ளார்.

96 சிக்சர்
ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த அணியானது இந்தியா. 2024ல் இதுவரை மூன்றுவித கிரிக்கெட்டில் 96 சிக்சர் அடித்துள்ளது. இதற்கு முன் 2022ல் இங்கிலாந்து 89 சிக்சர் அடித்து இருந்தது.

ஒரே நாளில் 437 ரன்
கான்பூர் டெஸ்ட் 4வது நாளில் வங்கதேசம் 152 (126+26), இந்தியா 285 என மொத்தம் 437 ரன் எடுக்கப்பட்டன. இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில், ஒரே நாளில் அதிக ரன் எடுக்கப்பட்ட வரிசையில், இது இரண்டாவது இடம் பிடித்தது. முன்னதாக 2009ல் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இந்தியா, இலங்கை மோதின. இதன் 2வது நாளில் 470 ரன் எடுக்கப்பட்டன.

Advertisement