ரேஷன் கடை வளாகத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகிபேட்டையில், 2013 - 14ல் கழிப்பறை வசதியுடன் ரேஷன் கடை கட்டப்பட்டது.
இக்கடையில், 168 கார்டுதாரர்களுக்கு, கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோரும், ரேஷன் கடை ஊழியர்களும் இயற்கை உபாதைக்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ரேஷன் கடையில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா உடைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் ரேஷன் கடை வளாகத்தில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
எனவே, உடைக்கப்பட்ட, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்கவும், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின்குமார் கூறியதாவது:
பாவாசாகிபேட்டை ரேஷன் கடை கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை வளாகத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.