மழைக்கு முன்பே மழைநீரை வெளியேற்றியதாக 'கமிஷன்' பார்த்த நாரவாரிகுப்பம் பேரூராட்சி
செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், மழைக்கு முன்பே மழைநீரை வெளியேற்றியதாக கணக்கு காட்டி பணம் சுருட்டி, நுாதன மோசடி நடந்துள்ளது.
செங்குன்றம், நாரவாரிகுப்பம் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகளும், 110 தெருக்களும் உள்ளன. இம்மாதம் நடந்த வார்டு கூட்டத்தில் 18 பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கடந்த ஜூலை முதல் செப்., வரையிலான பேரூராட்சியின் செலவுகள் மன்றத்தின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் வைக்கப்பட்டது.
இதில், பெரும்பாலான செலவுகளுக்கு, பணிகளே நடக்காமல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரும்பாலான செலவுகளும், அதற்குரிய காரணங்களும் பகுதி கவுன்சிலர்களுக்கே தெரியாத அளவிற்கு இருந்துள்ளன.
இதிலும் குறிப்பாக, நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் செலவுக்கே, வேறு ஒரு தனி நபரிடம் கடன் வாங்கி செய்தது போல் கணக்கு காட்டப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேரூராட்சியில், கொசு ஒழிப்பு பணிக்கு பணியாளர்களே இல்லை. பொதுமக்கள் வீட்டிலும், தண்ணீர் தொட்டிகளிலும் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இப்பணிக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு கணக்கு காண்பித்துள்ளனர்.
அதேபோல் ஜி.என்.டி., சாலையில், சாலையோர ஆக்கிரமிப்பு வியாபாரிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த பணிக்கு பேரூராட்சி சார்பில், 90,000 ரூபாய்க்கு மேல் செலவு கணக்கு காட்டியுள்ளது.
நுாதன மோசடி செலவு கணக்கில் சில:
செப்., 19: பாடியநல்லுாரில் குப்பை கொட்டும் இடத்தில், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக கால்வாய் தோண்டி மழைநீரை வெளியேற்றியதற்கு, தனியார் நிறுவனத்திற்கு 9,800 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.
செப்., 2 மற்றும் 29: அவசர அவசிய சில்லரை செலவு செய்ததற்கு, வை.கருணாநிதி என்பவருக்கு 9,862 ரூபாய் மற்றும் 9,976 ரூபாய் என, இரண்டு காசோலை.
தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, ஆக., மாத சம்பளமாக, 1.13 லட்சம் ரூபாய்க்கு காசோலை.
ஆக., 28: பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி செய்து புகைப்படம் எடுத்த பணிக்கு, தனியார் நிறுவனத்திற்கு 94,588 ரூபாய்க்கு காசோலை.
* ஆக., 27: பேரூராட்சியின் 12, 13, 14 மற்றும் 16வது வார்டுகளில், மழைநீர் கால்வாயில் உள்ள மண் குவியலை அகற்ற, 57,860 ரூபாய் செலவு.
இவ்வாறு, பலவிதமாக கணக்கு காட்டி நுாதன மோசடி நடந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்து உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் நாரவாரிகுப்பம் 'வாட்ஸாப்' குழுவில் பகிர்ந்து உள்ளதாவது:
ஒரு மாத காலமாக, தெருவிளக்குகள் எரியவில்லை. ஒவ்வொரு தெருவிலும் கால்வாயில் மண்ணை அகற்றாததால், கால்வாய் தண்ணீர் வெளியேறி பாய்ந்து, காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இதைப் பற்றி பலமுறை புகார் செய்தும், எந்த ஒரு பலனும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும், கவுன்சிலர் பதவிக்கு கூட மரியாதை தராமல், எதற்கெடுத்தாலும் கடிதம் கொடுக்கும்படி கூறுகினறனர்.
குப்பை அகற்றவில்லை எனக் கூறினால், மனு கொடுக்கும்படி கூறுகின்றனர். இதே போல, சிறு சிறு பணிகளுக்கும் மனு கொடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.
பஞ்சாயத்திற்கு முக்கியமான பணி குடிநீர், தெரு விளக்கு, கால்வாய் பராமரிப்பு, குப்பை அள்ளுதல் இதுதான். இந்த முக்கியமான பணியில் ஒன்றுகூட சரியாக நடப்பதில்லை. கடந்த ஒரு வருட காலமாக, எந்த ஒரு கவுன்சிலருக்கும் சரியான முறையில் பதில் வருவதில்லை. தயவு செய்து ஒரு தீர்வு காண வேண்டுமென, அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் என்னால் எந்த ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடுகிறார்கள். இதைப் பற்றி செயல் அலுவலரும், எந்த ஒரு அதிகாரியும், ஊழியரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு தான் இந்த பதிவை பதிவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர், ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து, நாரவாரிக்குப்பம் செயல் அலுவலர் யமுனாவை தொடர்பு கொண்ட போது, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை குவிந்துள்ளது. குடியிருப்பு இடத்தில் தெரு விளக்குகள் எரியவில்லை. பகுதி மக்கள் இருட்டில் தான் தீபாவளியை கொண்டாடினர். இதுகுறித்த நாங்கள் கேட்டால், எங்களுக்கு அதிகாரி பதில் கூறுவதில்லை. செலவு கணக்கில் பலவற்றை இரண்டு முறை எழுதியுள்ளனர். இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். - என்.ராதா கிருஷ்ணன், 60;16வது வார்டு கவுன்சிலர் (அ.தி.மு.க.,)நாரவாரிக்குப்பம் பேரூராட்சி