'செந்தில் பாலாஜி தியாகி என்றால் அவரிடம் ஏமாந்தோர் துரோகிகளா?'

சென்னை : 'செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தை கொடுத்து வாழ்வை இழந்த இளைஞர்கள் துரோகிகளா என்பதை, முதல்வர் விளக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:



'செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது' என்று கூறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க உரை எழுதியிருக்கிறார்.

மோசடி வழக்கு



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை, ஒரு மாநிலத்தின் முதல்வர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

போக்குவரத்து துறையில், 1,630 பணிகளுக்கு தலா 12 லட்சம் ரூபாய் வரை செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக, காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. 2016ல் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள், 'ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல' என்று, முதல்வர் ஸ்டாலின் பாடல் பாடினார்.

மோசடி வழக்கில், 471 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததில் என்ன தியாகம் இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் உண்மையாகவே நிற்பவராக இருந்தால், மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்று தந்திருக்க வேண்டும்.

ஆனால், அவரை அமைச்சராக்கி, தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார். திராவிட மாடல், 'வாஷிங் மிஷின்' அந்த அளவுக்கு, வெளுத்து எடுத்திருக்கிறது.

அரசு வேலை தருவதாக ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தை கொடுத்து வாழ்வை இழந்த இளைஞர்கள் துரோகிகளா என்பதை, முதல்வர் விளக்க வேண்டும்.

நியாயமாக நடக்குமா?



பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது முதல்வரின் கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து, மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி, அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு தமிழகத்தில் நியாயமாக நடக்கும் என்று தோன்றவில்லை.

எனவே, இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement