அடையாறு கரையில் குவித்த குப்பையை அகற்ற கோரிக்கை
ஜாபர்கான்பேட்டை, அடையாற்றில் இருந்து அகற்றப்பட்ட குப்பை கரையோரம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அகற்றாததால் மீண்டும் குப்பை ஆற்றில் விழும் நிலை உள்ளது.
சென்னையில் மழைக்காலத்திற்கு முன் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் நடைபெற்றன.
இதில், ஜாபர்கான்பேட்டை பகுதி வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் இருந்த குப்பை அகற்றப்பட்டு, கரையோரம் குவிக்கப்பட்டது.
ஆனால், குவிக்கப்பட்ட குப்பையை முறையாக அகற்றாமல் அங்கேயே விட்டுள்ளனர்.
இதனால், ஆற்றில் இருந்து அகற்றப்பட்ட குப்பை, மீண்டும் ஆற்றிலேயே விழும் நிலை உள்ளது.
எனவே, ஆற்றங்கரையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஜாபர்கான்பேட்டையில், அடையாற்றில் இருந்து குப்பை அகற்றப்பட்டு, கரையில் குவிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு அதை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் மழை வரும்பட்சத்தில், இந்த குப்பை மீண்டும் ஆற்றில் சேரும். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகும். குப்பையை அகற்றும் போதே, அவற்றை அங்கிருந்து முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.