சூரிய ஒளி கொண்டு சுற்றுச்சூழலை காக்கலாம்

தாவரம் சூரிய ஆற்றலைக் கொண்டு கரியமில வாயுவையும் நீரையும் பிராணவாயுவாகவும், அதன் உணவாகவும் மாற்றுகிறது. இதே முறையைப் பின்பற்றிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களைப் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்சிகில் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது நம் வாகனங்களில் பயன்படுத்தும் புதைபடிவ எரிபொருட்கள் எரியும்போது மீத்தேன், கரியமில வாயு ஆகியவை வெளிப்படுகின்றன.

இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே இவற்றைத் தங்கம், பலேடியம், கேலியம் நைட்ரைட் ஆகியவற்றை வினையூக்கிகளாகக் கொண்டு க்ரீன் மெத்தனலாகவும், கார்பன் மோனாக்சைடாகவும் மாற்றுகின்ற முறையைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு மாற்ற சூரிய ஒளியைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த வேதிவினைக்குக் குறைவான ரசாயனங்களே போதுமானவை. அதிகமான வெப்பநிலையும் தேவைப்படாது.

கார்பன் மோனாக்சைடை மருத்துவ ஆய்வுகள், சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியும். இது தவிர இதை நெகிழிகளின் தயாரிப்புக்கும், வாகனங்களுக்கான எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வந்தால், ஒரே நேரத்தில் சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாம், பயனுள்ள பொருட்களைக் குறைந்த விலையில் தயாரித்துப் பொருளாதார ரீதியாகவும் பயனடையலாம்.

Advertisement