டெங்கு, ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு; தினம் 5,000 பேர் வரை சிகிச்சை

சென்னை : டெங்கு, ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


அதில், 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. எனவே, இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.


அதேபோல், கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட டெங்கு அறிகுறி இருந்தாலும், தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம்.



தற்போது, தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் பாதிப்புகளால், தினமும் ஆயிரக்கணக்னோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



இதில், டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால் மட்டுமே, 5,000 பேர் வரை மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சை பெறுவதாக, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்னனர்.


இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மிதமான பாதிப்புகள் இருப்பவர்கள், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ எடுக்க தேவையில்லை. அவர்கள் ஓய்வெடுப்பதுடன், ஆவி பிடிக்க வேண்டும். துளசி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை சாப்பிட்டாலே போதுமானது.



அதே நேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரைப்படி, 'ஓசல்டாமிவிர்' என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.


மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.



பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement