'என் சொந்த விஷயம்... இது எந்த அரசியலும் சதியும் இல்ல': அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா பளார்

4

சென்னை: நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அப்படி சினிமாவில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றனர்.


இந்த விவகாரத்துக்கான காரணம் குறித்து சமந்தா, நாக சைதன்யா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதனிடையே, நாக சைதன்யா, சக நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


இதனிடையே, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கே.டி.ராமராவால், சமந்தாவைப் போல பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டே சென்று விட்டதாகவும் குண்டை தூக்கிப் போட்டார்.


அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா கடும் கோபத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும்.


உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.




வாபஸ் பெற்றார்

பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்த கருத்தை திரும்ப பெற்று கொண்டார் அமைச்சர் சுரேகா

Advertisement