மகப்பேறு காலத்தில் குழந்தை இறப்பை குறைக்க 4 புதிய திட்டங்கள் துவக்கம்

2

சென்னை: தமிழகத்தில், மகப்பேறு காலத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை, பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவதற்காக, நான்கு புதிய திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அனைத்து குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகளை கண்டறிய, 1,000 அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டத்தில், குழந்தைகளுக்கும் பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படும். பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலத்தை கண்காணிக்க, 400 இடங்களில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக, அனைத்து குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகளை கண்டறிவதுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.

வளர்ச்சி குறைபாடுகள், செவித்திறன் குறைபாடுகள், பார்வை குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இத்திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.

குறை பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை, தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே, தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடி திட்டம், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான கருவிகள், 1.28 கோடி ரூபாயில் கொள் முதல் செய்யப்படும்.

சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய மருத்துவ முறையுடன் ஒருங்கிணைந்து, செவிலியர்களுக்கு விரிவான மகப்பேறு பராமரிப்பு குறித்த பயிற்சி, 1.74 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும். ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான, 'பெற்றோர் பயன்பாட்டு செயலி'யும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில், சுகாதாரம், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தகவல்கள், கர்ப்பம் மற்றும் பிரசவ கால தகவல்கள், குழந்தை பராமரிப்பு, தாய்ப்பால் முக்கியத்துவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில் பல்வேறு குழந்தைநல திட்டங்களை செயல்படுத்தியதால், 1,000 பிறப்புகளுக்கு 10 ஆக இருந்த குழந்தை இறப்பு, எட்டாக குறைந்து உள்ளது.

அதேபோல, ஒரு லட்சம் பிரசவத்தில், மகப்பேறு இறப்பு 40 ஆக உள்ளது. இந்த இரண்டையும், பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர, நான்கு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

3.26 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு!

தமிழகத்தில், 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகின்றன. இதற்கான தடுப்பூசிகள், மத்திய அரசிடம் இருந்து பெறப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது தவறு. மத்திய அரசு, 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும். அதில், 9 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 11 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும். தற்போது, 3.26 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

காய்ச்சல் பாதித்தவுடன் மருத்துவமனைக்கு வராமல் தாமதித்த ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

- சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.

Advertisement