அடிச்ச கொள்ளையில் 500 கோடி ரூபாயை கொடுங்க; முன்னாள் அமைச்சரை கேட்கிறார் இந்நாள் முதல்வர்!

8


ஹைதராபாத்: 'முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சி, மக்களிடம் கொள்ளையடித்து 1500 கோடி ரூபாயை வங்கியில் குவித்து வைத்துள்ளது. இதில் மாநில மக்களுக்காக, ரூ.500 கோடியை தர வேண்டும்' என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.



தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: பாரத ராஷ்டிர சமிதி கட்சியினர் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர். சந்திரசேகர ராவ் கட்சி ரூ.1,500 கோடிக்கு வங்கிகளில் குவித்து வைத்துள்ளது. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அந்த பணத்தில் ரூ.500 கோடியை தர வேண்டும்.


அந்த பணம் கஷ்டப்பட்ட மக்களிடம் சென்று சேருவதை, நாங்கள் உறுதி செய்வோம். பி.ஆர்.எஸ்., கட்சி தலைவர் கே.டி.ராமராவுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், ஒரு பகுதியை இந்திரா அம்மா வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்கு நன்கொடையாக அளிக்க வேண்டும். கஜ்வேலில் கே.சி.ஆருக்கு சொந்தமான 100 ஏக்கர் பண்ணை வீடு உள்ளது.


மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் அதில் 50 ஏக்கரை தானமாக கொடுங்கள். பொதுமக்களுக்கு வீடுகள் கட்டித் தருவது எனது பொறுப்பு. ஜனவாடாவில் உங்களுக்கு (கே.டி.ஆர்.,) 50 ஏக்கர் நிலம் உள்ளது. பொதுமக்களுக்கு 25 ஏக்கர் ஒதுக்குங்கள், நாங்கள் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு அந்த நிலத்தை பயன்படுத்துவோம். இவையெல்லாம் நீங்கள் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவைகளே தவிர, உங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.



கே.டி.ஆர்., பதிலடி




இதற்கு பதிலளித்து முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.,) மகன் கே.டி.ராமராவ் (கே.டி.ஆர்.,) கூறுகையில், 'முதலில் ஏழைகளின் வீடுகளை புல்டோசர் நடவடிக்கை மூலம் இடித்து, அவர்களின் வாழ்க்கையை அழிப்பதை நிறுத்துங்கள். ரேவந்த் ரெட்டி துர்கம்செருவில் அமைந்துள்ள தனது சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீட்டையும், கோடங்கலில் உள்ள தனது சொந்த வீட்டையும் முதலில் இடிக்க வேண்டும்' என்றார்.

Advertisement