மெரினாவில் விமானப்படை சாகசம்; வானில் வர்ண ஜாலம் காண திரண்டது மக்கள் வெள்ளம்!

6


சென்னை: இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில், இன்று (அக்.,06) விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சாகசத்தை கண்டு ரசித்தனர்.


இந்திய விமானப்படை நிறுவன தினம் அக்., 8ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு விமானப்படை நிலையங்களில், அணிவகுப்பு ஏற்பாடு தயாராகி வருகிறது. முதல் முறையாக தமிழகத்தில், பிரமாண்ட 'ஏர் ஷோ' இன்று (அக்.,06) காலை 11 மணிக்கு சென்னை, மெரினாவில் துவங்கியது.

Latest Tamil News

பாராசூட் சாகசம்




முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெ லிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.


கருடா கமாண்டோ




எதிரிகளிடம் சிக்கிய பிணைக்கைதிகளை துணிகரமாக மீட்பது போன்ற கருடா கமாண்டோ படையினரின் சாகச ஒத்திகை, பார்வையாளர்களை கவர்ந்தது.

Latest Tamil News

மூவர்ண பாராசூட்டில் சாகசம்!




சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியில், மூவர்ண பாராசூட் உடன் குதித்து பறந்து வந்து அசத்திய ஆகாஷ் கங்கா குழுவினர்.


சேத்தக் விமான சாகசம்




பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள் வானில் வலம் வந்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Latest Tamil News

ரபேல் விமானங்கள் சாகசம்




சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமான படையின் முக்கிய தாக்குதல் விமானமாக கருதப்படும், ரபேல் விமானங்கள் வலம் வந்தன. இடி முழக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகம் அடைந்தனர்.


டகோடா போர் விமான சாகசம்




இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட டகோடா போர் விமானம், இன்று சென்னை மெரினாவில் பறந்து பார்வையாளர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.


ஹார்வர்ட் விமானம்; பயிற்சி விமானமான ஹார்வர்ட் விமானம் வானில் பட்டாம் பூச்சி போல் சிறகடித்து பறந்தது. தலைகீழாக பறந்து மெரினாவில் சாகசம் புரிந்து வியப்பில் ஆழ்த்தியது.


HTT-40 விமானம் சாகசம்: விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள HTT40 விமானம் சாகசம் புரிந்து அசத்தியது.

Latest Tamil News
C295 விமானங்கள் சாகசம்; 2 ஆயிரம் கி.மீ., தூரம் செல்லக்கூடிய விமானம் மெரினா வான் பரப்பில் சாகசத்தில் ஈடுபட்டு சிலிக்க வைத்தது.


மிரள செய்த மிக் விமானங்கள்; வானில் இருந்து போர் புரியும் திறன் உள்ள மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து மிரளச் செய்தன.


P81 ரக விமானங்கள் சாகசம்; கடலோரப்படையின் P81 ரக விமானங்கள் மெரினா கடற்கரையில் சாகசம் புரிந்து மெய்சிலிர்க்கச் செய்தன.


சீறிப் பாய்ந்த தேஜஸ் விமானம்; சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன.


ஜாகுவார் சாகசம்; மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசம் நிகழ்த்தின.


சுகோய் 30MKI ரக விமானம்; அனைத்து தருணங்களிலும் போர் புரியக்கூடிய சுகோய் 30MKI ரக விமானம் பாய்ந்து சாகசம் புரிந்தன.


சி-17 விமானம் சாகசம்: சூர்யகிரண் ஏரோபோட்டிக் அணியின் புடை சூழ சென்னை வானில் கெத்து காட்டிய சி-17 கனரக விமானம்; போரில் இந்த விமானம் நம் ராணுவப் படையைச் சுமந்து செல்லும்.


ஹெலிகாப்டர்கள் சாகசம்: அதிர வைக்கும் ஓசையுடன் ஐந்து ஹெலிகாப்டர்கள் புகையை உமிழ்ந்தபடி வானில் வலம் வந்தன. வானில் சுழன்று சுழன்று வந்தும் மேலும் கீழுமாக பறந்தும் பார்வையாளர்களை ஹெலிகாப்டர்கள் வெகுவாக கவந்தது.



Heart வரைந்த ஹெலிகாப்டர்கள்: வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் Heart வரைந்து பார்வையாளர்களை திகைக்கச் செய்தன. வானில் இதயம் வரைந்து மக்களின் மனதை தொட்டு சாகசம் காட்டி ஹெலிகாப்டர்கள் அசத்தியது.


போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.


சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு விருதினராக, முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் வந்தனர். கடற்கரையில் குடை பிடித்தவாறு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்கின்றனர், போலீசார்.


அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், மெரினா கடற்கரையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விமான சாகச நிகழ்ச்சிக்காக, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

Latest Tamil News


5 லட்சம் பேர்!; சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியை, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.



லிம்கா சாதனை!; இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை சென்னை மெரினாவில் விமானப்படையினர் நடத்திய வான் சாகச நிகழ்ச்சி ஏற்படுத்தியது.


10 பேர் காயம்


மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 பேர் மயக்கம் அடைந்தன.

Advertisement