ஆபாச பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!

'குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல' என்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும், அவற்றை பதிவிறக்கம் செய்வதும், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் குற்றமே என்பதையும் உறுதி செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பானது, குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான விஷயங்களுக்கு, புதிய வரையறைகள் மற்றும் விளக்கங்களை தந்துள்ளது மட்டுமின்றி, இத்தகைய படங்களை தடைசெய்ய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்தியுள்ளது.

அத்துடன், இத்தகைய ஆபாச படங்களை கையாள, கடுமையான சட்ட விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை வரும் காலத்தில் உருவாக்க வேண்டியது அவசியம் என்பதையும் தீர்ப்பும் முன்மொழிந்துள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்த ராஜ்யசபா குழு, 'குழந்தைகள் ஆபாச படங்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப மற்றும் நிறுவனங்கள் ரீதியான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன், அவற்றை கடுமையாக அமல்படுத்துவதும் அவசியம்' என்று தெரிவித்திருந்தது. அந்த பரிந்துரை சரியானதே என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் ஆபாச படம் என்று குறிப்பிடாமல், அதன் பெயரை, 'குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் பொருள்' என்று மாற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல, மற்ற நீதிமன்றங்களும் இனி தங்கள் தீர்ப்புகளில், 'குழந்தைகள் ஆபாச படங்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், குற்றம் நிகழ்வதை தடுக்க நீதிமன்றம் முற்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை நீக்கும்படியோ அல்லது அழிக்கும்படியோ அல்லது அதுபற்றி புகார் அளிக்கவோ தேவையில்லை என்ற நிலைமையை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், ஆபாச படங்களை மற்றவர்களுக்கு தங்கள் இஷ்டம் போல பகிர்வதை, இந்த நீதிமன்றமே ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதும் சரியானதே.

வீடு, பள்ளி வளாகம், பொது இடங்கள் என ஆங்காங்கே, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாவது தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுவர், சிறுமியர் பலாத்காரத்திற்கு ஆளாகும் போது, ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொள்வதுடன், வெளியில் சொல்ல முடியாத கடினமான சூழ்நிலையையும் சந்திக்கின்றனர்.

இருப்பினும், குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை வெளியில் சொன்னால், தங்களின் குடும்பத்திற்கு அவமானம் நேரிடும் என்று நினைக்கும் பெரும்பாலான பெற்றோர், அதை மூடி மறைக்கவே பெரும்பாலும் முற்படுகின்றனர். பல சந்தர்ப்பங்களில், இப்படிப்பட்ட இழிவான செயல்களில், குடும்ப உறுப்பினர்களே ஈடுபடுவதாலும், அந்த சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பரவலான பயன்பாடே, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு காரணம் என, 'யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால், கடுமையான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதன் வாயிலாகவே, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தடுப்பது மட்டுமின்றி, குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

மேலும், பாலியல் தொல்லைக்கு குழந்தைகள் ஆளானால், அவர்களின் கல்வி, தனித்தன்மை உள்ளிட்ட பல விஷயங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத்தகைய தொல்லைகளுக்கு ஆட்படாமல், ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்க வேண்டியது, இந்த சமூகம் மற்றும் அரசின் பொறுப்பாகும்.

அப்படிப்பட்ட சூழலில், சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் பாலியல் பலாத்காரம் விஷயத்தில், எந்த விதமான சகிப்புத்தன்மைக்கும் இடமில்லை என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. இத்தீர்ப்பால், வரும் காலத்தில் குற்றங்கள் குறையும் என நம்பலாம்.

Advertisement