'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்': பரூக் அப்துல்லா நம்பிக்கை

3


ஸ்ரீநகர் : '' காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.


காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. நாளை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், அங்கு காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டு உள்ளது.


இந்நிலையில் பரூக் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது: காஷ்மீரை காப்பாற்ற வேண்டும் என்றால், ஒன்றாக அமர்ந்து தான் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தை சூழ்ந்துள்ள ஆபத்துகளில் இருந்து காஷ்மீரை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். நான், ஜம்மு சென்றிருந்த போது அங்குள்ள சூழ்நிலை என்னை கண்ணீரில் ஆழ்த்தியது. சாலைகள் மிகவும் மோசமடைந்து இருந்தன. ஜி20 மாநாடு ஜம்முவில் நடத்தாமல் ஸ்ரீநகரில் நடத்தியது ஏன்? தூதர்கள் ஜம்மு வராமல் ஸ்ரீநகர் வந்தது ஏன்? தேர்தல் நேரத்தில் தூதர்கள் ஜம்மு வராமல் ஸ்ரீநகர் வந்தது ஏன்?


மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு தேவைப்படாவிட்டாலும், அவர்கள் அளித்தால் ஏற்றுக் கொள்வோம். நாம் தனியாக சென்றாலும், இணைந்து செயல்படுவோம். இந்த மாநிலத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மாநிலத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

எங்களுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்த மெகபூபா முப்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநிலத்தை இணைந்து கட்டமைப்போம். அவருடன் நான் இன்னும் பேசவில்லை. நாளிதழ்கள் மூலம் தான் அவரது ஆதரவை அறிந்து கொண்டேன். காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசிற்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க வேண்டும். சுமூகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

Advertisement