லஞ்ச இன்ஸ்பெக்டருக்கு 6 ஆண்டுகள் சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ரூ.2000 லஞ்சம் பெற்ற வழக்கில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பளித்தார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகேவுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் அன்புமலை கண்ணன் என்ற சாதுமங்கலசாமி. 2010ல் இவரது பேத்திக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.

இதுகுறித்து காளையார்கோவிலில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செங்குட்டுவன் 60 விசாரித்தார். அப்போது அன்புமலை கண்ணனின் பேத்திக்கு சீதனமாக கொடுத்த டூவீலரை அவரது கணவரிடமிருந்து பெற்று கொடுக்க ரூ. 2000 லஞ்சமாக இன்ஸ்பெக்டர் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்புமலை கண்ணன் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் தந்த அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாயை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் 2010 ஜூலை 2ல் அன்புமலை கண்ணன் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை கைது செய்தனர்.

இவ்வழக்கில் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில் முரளி தீர்ப்பளித்தார்.

Advertisement