நீலகிரி மின் நிலையங்களில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை பணிகள்

ஊட்டி : நீலகிரி மின் நிலையங்களில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, பேரிடர் தடுப்பு நடவடிக்கை பணிகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, சிங்காரா உள்ளிட்ட, 12 மின் நிலையம்; அப்பர்பவானி, எமரால்டு, பார்சன்ஸ் வேலி, போர்த்தி மந்து, சாண்டிநல்லா, கிளன்மார்கன் உள்ளிட்ட, 13 அணைகள் உள்ளன. இவைகளில், நாள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

இங்குள்ள மின் நிலையம் மற்றும் அணைகள் மலைச்சரிவுகளில் அமைந்துள்ளது. பருவ மழை சமயங்களில் பேரிடர் பாதிப்புகளை தடுக்க மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை, விரைவில் துவங்க இருப்பதால் நீலகிரியில் உள்ள மின் நிலையங்கள், அணைகளில் பராமரிப்பு பணிகளை மின் வாரியம் செய்து வருகிறது.

அதன்படி, கெத்தை, காட்டுகுப்பை, அப்பர்பவானி, பைக்காரா உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் இடங்களில் மழையின் போது அடித்து வரப்படும் சேறு, சகதிகளை தடுக்க கால்வாய் அமைத்து மழை நீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் உற்பத்திக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாய்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்; மின் கோபுரங்களுக்கு இடையூறாக உள்ள அபாயகரமான மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

அதிகாரிகள் கூறுகையில், 'மின் நிலையம், அணைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பருவ மழையின் போது மேற்கொள்ளப்படும் வழக்கமான பணிகள் அந்தந்த மின் வட்டத்தில் நடந்து வருகிறது,' என்றனர்.

Advertisement