மலம்புழா அணையில் இருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

பாலக்காடு: மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.

கேரளா மாநிலத்தின் முக்கிய அணைகளில் ஒன்று மலம்புழா. 377 அடி உயரமுள்ள இந்த அணை பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, தற்போது, 370 அடியை தொட்டுள்ளது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்பு மற்றும் வெள்ள பாதிப்பு தவிர்க்க, நேற்று காலை, 8:30 மணிக்கு அணையின் 4 மதகுகள் வழியாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த இரு மாதங்களில், மூன்றாவது முறையாகும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதகுகள் திறக்கப்பட்டு, நீர் வெளியேறும் காட்சியை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.

மலம்புழா நீர்ப்பாசன பிரிவு நிர்வாக பொறியாளர் மோகன் கூறுகையில், ''அணைக்கு நீர் வரத்தை பொறுத்து, மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

மூகைப்புழை, கல்பாத்திப்புழை, பாரதப்புழை ஆகிய ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஆற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்,'' என்றார்.

Advertisement