சில நிமிடத்தில் நிறைவடைந்த பி.ஏ.பி., தின விழா: காத்திருந்த விவசாயிகள்  அதிருப்தி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பி.ஏ.பி., திட்ட பிதாமகன்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், செய்தித்துறை அமைச்சர் வந்த சில நிமிடங்களிலேயே கிளம்பிச்சென்றதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இத்திட்டம் உருவாக காரணமாக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கே.எல்.ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அவர்களது உருவப்படங்களுக்கு மலர் துாவி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மரியாதை செலுத்தினார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி குடும்ப உறுப்பினர் அருள், முன்னாள் எம்.எல்.ஏ., மகாலிங்கத்தின் மகன் மாணிக்கம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் துாவி மரியாதைசெலுத்தினர்.

நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பி.ஏ.பி., திட்டப்பணி துவங்கப்பட்ட நாளான அக்., 7ம் தேதி அரசின் சார்பில், பி.ஏ.பி., பாசன திட்ட தினமாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. திட்டத்தை உருவாக்கி தந்த மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிதாமாகன்களுக்கு திருவுருவச்சிலையுடன், அவர்கள் நினைவாக இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. பி.ஏ.பி., திட்டப்பணியின் போது, உயிர்நீத்தோருக்கான நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடக்கிறது.இப்பணிகள் முடிந்ததும், முதல்வரால் திறந்து வைக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.

ஏமாற்றமே மிஞ்சியது!

விழாவில் பங்கேற்க, நேற்று காலை, 10:00 மணி முதலே விவசாயிகள் வரத்துவங்கினர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர். மதியம், 12:30 மணிக்கு வந்த அமைச்சர் சாமிநாதன், திருவுரு படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தியதும் சில நிமிடங்களில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதனால் விவசாயிகள்அதிருப்தியடைந்தனர்.பி.ஏ.பி., பாசன திட்ட கூட்டமைப்பு செயலாளர் கோபால் கூறுகையில், ''விழாவில் பங்கேற்ற அமைச்சர், அரசின் அறிவிப்பாக ஏதாவது கூறுவார். விவசாயிகளிடம் கலந்துரையாடி, கோரிக்கையை கேட்டு, அரசுக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்த்தோம்.ஆனால், காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது,'' என்றார்.

Advertisement