ஏ.டி.எம்., கார்டை மாற்றி மோசடி: பலே ஆசாமிக்கு காப்பு

உளுந்தூர்பேட்டை : ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி, கார்டை மாற்றி கொடுத்து பல இடங்களில் கைவரிசை காட்டிய ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனுார் தாலுகாவை சேர்ந்தவர் அரசன் மனைவி சின்னபொண்ணு,55; இவர் நேற்று மதியம் 1.00 மணியளவில் உளுந்தூர்பேட்டையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ1 ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த வாலிபரிடம் பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு கூறி ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். கார்டை வாங்கிய வாலிபர், ரகசிய எண்ணை வாங்கிய பின், உங்கள் கணக்கில் பணம் இல்லை எனக்கூறி, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார்.

உடன் சின்னபொண்ணு, ஏன் ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுக்கிறாய் எனக் கேட்டவுடன் வாலிபர் தப்பியோட முயன்றார்.

சின்னபொண்ணு கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அருகே உள்ள சின்னகுப்பத்தை சேர்ந்த ராஜாராம்,32; என்பதும், இதேபோன்று பல ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி கார்டை மாற்றிக் கொடுத்து 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி செய்ததும், கடந்த ஏப்ரல் மாதம் திருக்கோவிலுார் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ராஜாராமை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement