ஆயுத பூஜையையொட்டி சாமந்தி பூ விலை 'விர்'


ஆயுத பூஜையையொட்டி சாமந்தி பூ விலை 'விர்'
கிருஷ்ணகிரி, அக். 10-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலுார், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி, செண்டுமல்லி, பட்டன் ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சீசனுக்கு தகுந்து சாகுபடி செய்யும் மலர்களை விவசாயிகள் அறுவடை செய்து, ஓசூர் மலர்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூருவிற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்தாண்டு பண்டிகை கால சீசனுக்கு முன்னரே, பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் சாமந்தி பூ விநாயகர் சதுர்த்தி பண்டிகையிலிருந்து தொடர்ந்து போதிய விலை கிடைக்காமல், 40 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், ஆயுத பூஜையை ஒட்டி ஓசூர் மலர் சந்தையில், சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி நேற்று, முதல் தரம், 280- ரூபாய்க்கும், 2ம் தரம், 200 ரூபாய்க்கும், 3ம் தரம், 160 ரூபாய்க்கும் விற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஆயுத பூஜைக்கு பூக்கள் வாங்க வந்தவர்களுக்கு, சாமந்தி பூவின் திடீர் விலை உயர்வு அதிர்ச்சியளித்தது.

Advertisement