பசுமை புதுவை செயல்திட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் இணைந்து இந்தாண்டிற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு 'பசுமை புதுவை' என்ற செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதன் துவக்க விழா கடந்த வாரம் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

இதையடுத்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சுற்றுச்சூழல் துறையில் நடந்தது. மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, முதுநிலை அறிவியல் அதிகாரி சகாய ஆல்பிரட், சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 'பசுமை புதுவை' செயல்திட்டத்தின்படி, 'ஒரு வீடு, ஒரு மரம்' என்ற திட்டத்தில் முதற்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 50 ஆயிரம் வீடுகளில் பலன் தரக்கூடிய மா, பலா, கொய்யா, எலுமிச்சை போன்ற பழவகை மரக்கன்றுகளை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்குவது.

'கோவில் காடுகளை புனரமைப்போம்' திட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 108 கோவில் காடுகளை புனரமைத்து சந்தனம், வில்வம், நாகலிங்கம், வேங்கை போன்ற விலை உயர்ந்த மரங்களை இந்து அறநிலைத் துறை மூலம் நடுவது.

'நகரத்தை பசுமையாக்குவோம்' திட்டத்தில், சாலை ஓரங்கள், சென்டர் மீடியன்கள், காலி இடங்களில் நகராட்சிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலமாக 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது.

'நீர்நிலைகளை பசுமையாக்குவோம்' திட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 480 குளங்களில் புங்கன், நாவல், புன்னை, இலுப்பை போன்ற 90 ஆயிரம் மரக்கன்றுகளை கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நட்டு பராமரிப்பது.

'தரிசு நிலங்களை பசுமையாக்குவோம்' திட்டத்தில் அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனுார் கொம்யூன்களில் உள்ள 40 ஆயிரம் ச.மீ., பரப்பளவில் உள்ள தரிசு நிலங்களில் கொடுக்காபுளி, புளி, நெல்லிக்காய், இலவம் போன்ற 10 ஆயிரம் மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சி துறையின் 100 நாள் வேலை திட்டத்தில் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

'பசுமை பள்ளி வளாகம்' திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 466 பள்ளிகள், 14 கல்லுாரிகள் மற்றும் காரைக்காலில் உள்ள 178 பள்ளிகள், 5 கல்லுாரிகளில் வேம்பு, சரங்கொன்றை, மகுடம், மயில்கொன்றை போன்ற 1,600 மரக்கன்றுகளை, மாணவர்களை கொண்டு அவர்களின் தாயின் பெயரில் நட்டு பராமரிப்பது.

'பசுமை அரசு அலுவலகம்' திட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 46 அரசுத்துறைகள், 11 அரசு சார்பு நிறுவனங்களில் புங்கன், மகுடம், சரக்கொன்றை போன்ற 5,000 மரக்கன்றுகளை நிர்வாக சீர்திருத்த துறை மூலமாக நட முடிவு செய்யப்பட்டது.

'பசுமை தொழிற்சாலை' திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 70 பெரிய மற்றும் 190 நடுத்தர தொழிற்சாலைகளில் அசோகா, பாக்கு, வேம்பு போன்ற 5,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement