அரசு பள்ளி விளையாட்டு திடலை மேம்படுத்த ரூ. 34 லட்சம் ஒதுக்கீடு

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை மேம்படுத்த ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், அப்பகுதி இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாக்கி பயிற்சி மேற்கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். இதன் மூலம் பலர் மத்திய, மாநில அரசில் வேலை வாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.

இந்த விளையாட்டு திடலை மேம்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், முதற்கட்டமாக கடந்த 2022ம் ஆண்டு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.20 லட்சம் செலவில், விளையாட்டு திடலில் மண் கொட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்டமாக கல்வித்துறை சார்பில், விளையாட்டு திடலை மேம்படுத்தி, பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க ரூ. 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனையொட்டி விளையாட்டு திடல் மேம்பாட்டு பணிக்கு ஓரிரு மாதங்களில் டெண்டர் விட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளது.

Advertisement