காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆம்ஆத்மி ஆதரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இன்று(அக்.,11) தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம்ஆத்மி அறிவித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேசிய மாநாட்டு கட்சி (42) - காங்கிரஸ் (6) கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற மற்றொரு கட்சியான கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் வென்றது. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ., 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வென்றன. ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் வென்றது.



தோதா தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளராக மேக்ராஜ் மாலிக் மொத்தம் 23,228 ஓட்டுகள் பெற்றார். இந்த தொகுதியில் மேக்ராஜ் மாலிக்கை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் கஜய் சிங் ரானா மொத்தம் 18,690 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஆம்ஆத்மி வேட்பாளர் மேக்ராஜ் மாலிக் 4,538 ஓட்டுகள் வித்தியாசத்தில் கஜய் சிங் ரானாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


இந்நிலையில், இன்று (அக்.,11) தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம்ஆத்மி அறிவித்துள்ளது. ஆம்ஆத்மி கட்சி உமர் அப்துல்லா தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கும் என கடிதத்தை துணைநிலை கவர்னரிடம் ஆம்ஆத்மி கடிதத்தை அளித்துள்ளது. இது குறித்து, ஆம்ஆத்மி கட்சி கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆம்ஆத்மி ஆதரவு அளிக்கும். சட்டசபையில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார் என கூறியுள்ளது.

Advertisement