மக்களே... ஒரு வாரம் மழை கொட்டி தீர்க்கப்போகுது! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

3

சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், அக்.15ம் தேதி சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகி இருக்கிறது. இந் நிலையில் அக்.15ம் தேதி சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 13ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

அக்.12, அக்.13ல் தமிழகத்தில் அனேக இடங்களிலும் திருப்பூர், கோவை, மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.14ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.15ல் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யும். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement