ரூ.4.6 கோடியில் மணிமுக்தாறு படித்துறை சீரமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு நகர்மன்ற தலைவர் நன்றி

விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை 4.6 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது என நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. மணிமுக்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது. பண்டைக்காலங்களில் இங்குள்ளோர் காசிக்கு செல்வதில்லை; காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் உண்டு.

மணிமுத்தாறு நதிக்கரையில் மாசிமகம் திருநாள் பிரசித்தி பெற்றது. இந்நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு மேல், தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விருத்தகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ள மணிமுக்தாறு நதிக்கரை படித்துறையில் கூடுவர்.

அத்தகைய பிரசித்தி பெற்ற திருக்கோவிலின் நதியின் படித்துறை பல ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைக்கும்படி, பொது மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில், அமைச்சர் கணேசன் முயற்சியால், நெய்வேலி என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 4.6 கோடி ரூபாயில் படித்துறையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. எனவே, விருத்தாசலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு பொது மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement