திருச்சூர் பூரம் குறித்து அவதுாறு கருத்து; சட்ட நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.எஸ்., முடிவு

3



திருவனந்தபுரம் : 'திருச்சூர் பூரம் விழா சீர்குலைவுக்கு ஆர்.எஸ்.எஸ்.,தான் காரணம் எனக்கூறும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

குற்றச்சாட்டு



இங்கு, முதல்வர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.


கடந்த ஏப்ரலில், இங்கு நடந்த திருச்சூர் பூரம் திருவிழாவில் இது எதிரொலித்ததாகவும் புகார் எழுந்தது.


ஆர்.எஸ்.எஸ்., தலையீட்டின் காரணமாகவே, இந்த திருவிழா முழுமையாக நடத்தப்படாமல் அவசரகதியில் அரங்கேறியதாகவும் கூறப்பட்டது.


இது தொடர்பாக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சூர் பூரம் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., மீது அவதுாறு பரப்பப்படுவதாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஈஸ்வரன் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:



இந்த ஆண்டு திருச்சூர் பூரம் விழா சீர்குலைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்புதான் காரணம் என்று, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் கூறுவது கண்டிக்கத்தக்கது.

நடவடிக்கை



எந்த அடிப்படையில் இதுபோன்ற தவறான கருத்துகளை எழுப்புகின்றனர் என தெரியவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., மீது வீண்பழி சுமத்துகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்., பெயரை அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கும் முயற்சி தவறான உள்நோக்கம் உடையது. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சூர் பூரம் மற்றும் சபரிமலை யாத்திரை போன்ற கேரளாவின் புனித விழாக்களில், வேண்டு மென்றே பதற்றம் மற்றும் சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் சபாநாயகர் ஏ.என். ஷம்சீரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் விரைவில் சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாணவேடிக்கை



திருச்சூர் பூரம் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமாக நள்ளிரவில் நடக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி, வரலாற்றில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பகலில் நடத்தப்பட்டது.

Advertisement