பள்ளி கல்வி துறையில் இல்லாத தேசிய விளையாட்டுகள்


மதுரை : தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளிக்கல்வித்துறையில் இல்லாத பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் செலவில் பங்கேற்கின்றனர்.



விளையாட்டு குழுமத்தின் கீழ் 50 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கான தமிழக அணி அளவிலான தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறை நடத்துகிறது. பயிற்சியாளர், விளையாட்டு சங்கங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பொருத்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட போட்டிகள் தமிழக அணி தேர்வுக்காக நடத்தப்படுகின்றன.


ஆனால் மல்யுத்தம், நெட் பால், பேஸ் பால், குராஷ்(மல்யுத்த வகை), மல்லர் கம்பம், ஆர்ச்சரி(வில்வித்தை), வெயிட் லிப்டிங், தங்க் டா(தற்காப்புக்கலை), கராத்தே, கிரிக்கெட், சாப்ட் டென்னிஸ், செபக் டக்ரா(காலால் உதைக்கும் பந்து), வூசூ, ரக்பி, சூட்டிங் போன்ற 15 வகையான விளையாட்டுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தின தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தினவிழா போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.



ஆனால் இந்த விளையாட்டுகளுக்கு சில மாவட்டங்களில் இருந்து விளையாட்டு சங்கங்கள் அல்லது ஆர்வமுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர்.

இந்த 15 விளையாட்டுகளில் ரக்பி, சூட்டிங், ஆர்ச்சரி விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வாங்க ரூ. லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்பதில்லை. அதேபோல பேஸ் பால் விளையாடுவதற்கான மைதானம் கால்பந்து மைதானம் அளவிற்கு தேவைப்படும். ஆனால் மற்ற விளையாட்டுகளை பள்ளி மைதானங்களில் பயிற்சி பெற்று விளையாடலாம். அந்தந்த மாவட்ட ரேஸ்கோர்ஸ் மைதானங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் கற்றுத்தரச் செய்யலாம். இந்த விளையாட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளன என்கின்றனர் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

விளையாட்டும், நிதியும் தேவை



அவர்கள் கூறியதாவது: ஆர்ச்சரி, பேஸ்பால், சூட்டிங் மற்றும் ரக்பி தவிர பிற விளையாட்டுகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் தேசியப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்வதன் மூலம் விளையாட்டு கோட்டாவில் உயர்கல்விக்கான இடஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்கும்.

விளையாட்டுகளை சேர்ப்பதோடு மற்ற எஸ்.ஜி.எப்.ஐ., விளையாட்டுகளுக்கு வழங்குவதைப் போல ஒவ்வொரு மாணவருக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான செலவுக்கு ரூ.9000 வழங்க வேண்டும். தற்போது மாணவர்கள் சொந்த செலவில் பங்கேற்க வேண்டியுள்ளது. வசதியில்லாத மாணவர்களுக்கு நாங்கள் செலவழிக்கிறோம் என்றனர்.

Advertisement