அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்; ரஹ்மான் இசையில் கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் அந்நாட்டில் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.



அமெரிக்காவில், அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5ல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.


இந்நிலையில், அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை, ஆசிய - அமெரிக்க - பசிபிக் தீவுவாசிகள் வெற்றி நிதியம் வரவேற்றுள்ளது.


இதை கொண்டாடும் விதமாக, நம் நாட்டின் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இசை நிகழ்ச்சிக்காக தேதி, இடம் குறித்த தகவல்களை, ஆசிய - அமெரிக்க - பசிபிக் தீவுவாசிகள் வெற்றி நிதியம் குறிப்பிடவில்லை. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Advertisement