ஆயுத பூஜைக்கு விஜய் வாழ்த்து

சென்னை : ஹிந்து அமைப்புக்கள் அளித்த நெருக்கடியால், ஆயுத பூஜைக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக கருத்துக்களை, அறிக்கை வாயிலாகவும், சமூக வலைதள பதிவுகள் வாயிலாகவும் தெரிவித்து வருகிறார்.

அறிவை போதிக்கும் புத்தகம்



சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டது. இதற்கு விஜய் வாழ்த்து கூறவில்லை. இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்; ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேற ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் விழாக்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி.


''இந்த திருநாள்களில் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிப்பெற இனிய நல்வாழ்த்துக்கள்,'' என, தெரிவித்துள்ளார்.

த.வெ.க.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



நடிகர் விஜய் அனைத்து மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் பொதுவானவர். அனைத்துத் தரப்பு மக்களின் ஓட்டுக்களையும் பெறும் நோக்குடன் தான், அவர், தமிழக வெற்றிக்கழகத்தைத் துவக்கி உள்ளார்.

அதனால், அனைத்து ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்கும்விதமாக முதல் கட்டமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்து, எல்லா இன மக்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்வார்.

தவறான புரிதல்



திராவிட இயக்கத்தவர்களைப் போல, இந்த விஷயத்தில் முரண்பட்ட அரசியல் செய்ய நடிகர் விஜய்க்கு விருப்பம் இல்லை. ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதால், விஜய்க்கு சிறுபான்மையின ஓட்டுக்கள் கிடைக்காது என்பது தவறான புரிதல்; வாதம்.

அது ஏற்கத்தக்கதல்ல. காரணம் - ஜாதி, மத அடையாளங்களுக்குள் நடிகர் விஜய் ஒரு நாளும் சிக்கியதில்லை. அவர் மீது எந்தப் புகாரும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆவினும் வாழ்த்து

அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து மத பண்டிகை நாட்களிலும், ஆவின் பால் பாக்கெட்டில், வாழ்த்து வாசகம் வெளியிடப்பட்டு வந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஹிந்து மத பண்டிகைகள் தொடர்பான வாழ்த்து வாசகங்கள் தவிர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் உத்தரவுப்படி, இது நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், நேற்று விற்பனைக்கு வந்த ஆவின் பாலில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.பால்வளத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன்உத்தரவுப்படி, இந்த வாழ்த்து செய்தியை, ஆவின்நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement