ரூ.1 கோடி விலையில் 'காலா' குதிரை; நாமக்கல் பண்ணை வீட்டில் விலங்குகள் சரணாலயம்


நாமக்கல்: நாமக்கல் அருகே, பண்ணை வீட்டில், 17 ஏக்கரில் விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வளரும், 'காலா' குதிரையை, தொழிலதிபர் அம்பானி தரப்பில், ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசியுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில், 17 ஏக்கர் பரப்பில் வரதராஜன் பண்ணை வீடு அமைந்துள்ளது. பண்ணை வீட்டின் உரிமையாளரான வீர வரதராஜன், விலங்குகளுக்கென இந்த இடத்தை அர்ப்பணித்துள்ளார்.



இங்கு, கோழி, ஆடு, சிறிய வகை காங்கேயம் மாடு, வான்கோழி, ஈமு கோழி, ஒட்டகம், லவ் பேர்ட்ஸ், புறா, நாய்கள் என அனைத்து விலங்குகளும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்கிறார். இந்த பண்ணை வீட்டின் சிறப்பாக, மூன்று குதிரைகள் வளர்ந்து வருகின்றன.

Latest Tamil News அவை, சாதாரண குதிரைகளை விட அதிக உயரம் கொண்டவை. மேலும், திடகாத்திரமாகவும், பார்ப்பவர்களை கவரும் வகையில் ஒய்யாரமாக உள்ளன.

இதுகுறித்து, வீர வரதாஜன் கூறியதாவது:



என் தந்தை செல்ல பிராணிகளை ஆர்வமாக வளர்த்து வந்தார். அவர் இறந்து விட்டார். அவரது சமாதி பூர்வீக இடமான மேட்டுப்பட்டியில் உள்ளது. அவரது நினைவாக, நானும் செல்ல பிராணிகளை வளர்க்கிறேன். வெளிமாவட்டம், வெளிமாநிலம் சென்றால், அங்குள்ள விலங்குகளை வாங்கி வந்து, இந்த பண்ணை வீட்டில் வைத்து பராமரிப்பேன். அதனால், இந்த பண்ணை வீடு விலங்குகளின் சரணாலயமாக மாறிவிட்டது.



'காலா' என்ற கத்திவார் ரக குதிரையை கண்காட்சிக்கு அழைத்து சென்றேன். அந்த குதிரையை, மும்பை தொழிலதிபர்கள், ஒரு கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்டனர். செல்லமாக வளர்த்ததால் விற்க மனமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement