வடசென்னை வெள்ளத்தை எண்ணுார் முகத்துவாரம்... சமாளிக்கும்! : ரூ.135 கோடி பயிற்று சுவர் பணி நிறைவால் நம்பிக்கை

'எண்ணுார் முகத்துவாரத்தை, 135 கோடி ரூபாய் செலவில் ஆழப்படுத்தி, இரு பக்கமும் பயிற்று சுவர் அமைக்கும் பணி முடிந்ததால், வெள்ள காலத்தில், 1.20 லட்சம் கன அடி உபரி நீர் கடலில் கலக்கும்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் போது, உபரி நீர் திறக்கப்படும். இந்த நீர், கொசஸ்தலை ஆற்றில் பல கி.மீ., துாரம் பயணித்து, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாப்பாளையம், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் வழியாக, புழல் ஏரி உபரி நீருடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.

அதே போல் புழல் ஏரி நிரம்பும் போது வெளியேறும் உபரி நீர் வடகரை, நாரவாரிக்குப்பம், காவாங்கரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, பர்மா நகர் உயர்மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, கொசஸ்தலை ஆற்றுடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.

சென்னையை, 42 கி.மீ., துாரத்திற்கு சுற்றியுள்ள பகிங்ஹாம் கால்வாய், திருவொற்றியூரின் குப்பைமேடு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், எர்ணாவூர், எண்ணுார் வழியாக புழல், கொசஸ்தலை உபரி நீருடன் இணைந்து, கடலில் கலக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளது.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய இரு ஏரிகள், பகிங்ஹாம் கால்வாயின் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உபரி நீரும், எண்ணுார் முகத்துவாரம் வழியாகத் தான், கடலில் கலக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு, 90,000 கன அடி, புழல் உபரி கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 14,000 கன அடி, பகிங்ஹாம் கால்வாயில், 5,000 கன அடி என, ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான உபரி நீர், கடலில் கலந்தது.

அப்போது, முகத்துவாரம் மணல் திட்டுகளால், 35 - 50 அடி அளவிற்கு குறுகி இருந்ததால், அளவுக்கு அதிகமான வெள்ள நீரை தாக்குப்பிடிக்க முடியாமல் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில், 5 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி, பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னைக்கு, முகத்துவாரம் துார்வாரப்படாதது முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதற்கு தீர்வாக, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு நிதி, 135 கோடி ரூபாய் செலவில், முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பயிற்றுச் சுவர் அமைக்கும் பணி, கடந்தாண்டு மார்ச் 22ம் தேதி துவங்கியது.

அதன்படி, முகத்துவாரத்தை, 9 - 50 அடிக்கு ஆழப்படுத்தி, வடக்கு பக்கம் 1,660 அடி துாரம், தெற்கு பக்கம் 1,340 அடி துாரமும், பயிற்றுச் சுவர் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இவ்விரு பயிற்று சுவர்களுக்கும் இடையேயான துாரம், 792 அடி. இதனால், வடசென்னை பெருவெள்ளத்தை எண்ணுார் முகத்துவாரம் சமாளிக்கும் என, பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எண்ணுார் முகத்துவாரத்தை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, பயிற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. ஏற்கனவே, மணல் திட்டுகளால் முகத்துவாரத்தில், 33 - 50 அடி அளவிற்கே தண்ணீர் செல்ல வழி இருந்தது. இதில் வெள்ள நீர், மீனவர்களின் படகுகள் செல்வதில் சிக்கல் இருந்தது.

தற்போது, 500 அடிக்கு, முகத்துவாரம் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 9 - 50 அடிக்கு ஆழப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, 5.30 லட்சம் கன மீட்டர் மணல் வெளியேற்றப்பட்டு உள்ளது. பணிகள் முழுதும் முடிந்த நிலையில், வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி உபரி நீர், கடலில் கலக்கும்.

ஆண்டுக்கு, 4 - 5 லட்சம் கன மீட்டர் மணல், முகத்துவாரத்தில் குவிந்து வந்த நிலையில், பயிற்றுச் சுவர் கட்டுமான பணிகள் முடிந்த பின், 28,000 கன மீட்டராக குறையும்.


இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement